Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் நாளைக்கே இதை செய்யுங்க!! முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin emphasis chief minister palanisamy will arrange for all party meeting
stalin emphasis chief minister palanisamy will arrange for all party meeting
Author
First Published May 14, 2018, 1:46 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாளையே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வரை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் ஒருவழியாக வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கோரிய வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்யாமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் தான் காரணம் என கூறாமல், மறைமுகமாக பல காரணங்களை கூறி இழுத்தடித்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று முன் தினம் முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் கோரிய காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.

மத்திய நீர்வளத்துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், காவிரி பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வாரியமோ ஆணையமோ குழுவோ அமைக்கப்படும். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமைக்கும் அமைப்பு நிறைவேற்றும். தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலிருந்து ஒவ்வொரு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் அதில் இடம்பெறுவர். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இது இருக்கும் என வரைவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணையை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வரைவு திட்டத்தை படித்து, அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து நாளை மறுநாள் விசாரணையின்போது தமிழக அரசு கருத்து தெரிவிக்கும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளையே உடனடியாக அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையின்போது அழுத்தமான வாதங்களை தமிழக அரசு முன்வைக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், நாளை அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்களை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வரை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios