மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலத்திற்கு பிறகு ஆரசியல் வாரிசு என அவர் யாரையும் தேர்வு செய்யாத காரணத்தால் தற்போது பிளவுபட்டு கிடக்கிறது அதிமுக. இந்நிலையில் தமிழகத்தில் இன்னுமொரு மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியும் தற்போது காலமாகிவிட்டார். இவ்விருவரின் இழப்பும் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தினை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுகவில் ஏற்பட்ட அணிப்பிளவுகள் போல எந்த பெரிய பிரச்சனையும் திமுகவில் இதுவரை ஏற்படவில்லை. ஏற்கனவே ஸ்டாலினை செயல் தலைவராக அறிவித்த போதே அவர் தான் அடுத்த தலைவர் என்று திமுகவினர் சொல்லாமல் சொல்லிவிட்டனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட வேண்டியது மட்டுமே பாக்கி. 

இதனால் திமுகவில் தலைவர் பதவிக்காக போட்டி இட்டு எந்த பிரிவினையும் ஏற்படாது என்ற நினைப்பில் இருந்த பலருக்கு, அழகிரி சமீபத்தில் கொடுத்த பேட்டி தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக உடையப்போகிறது என அவர் கூறி இருப்பதும், திமுக விசுவாசிகள் தன் பக்கம் என்று கூறி இருப்பதுமே இதற்கு காரணம்.

இந்த வேலைகளை எல்லாம் அழகிரி கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருக்கும் போதே ஆரம்பித்திருக்கிறார். அழகிரியின் இது போன்ற செயல்பாடுகள் ஸ்டாலினை ஒரு பக்கம் கடுப்பேற்றி இருந்தாலும் அவர் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.

இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய திமுகவினர்  அழகிரியின் செயல்பாடுகளை கண்டிக்குமாறு கேட்டிருக்கின்றனர். ஆனால் ஸ்டாலினோ அவர் கட்சியில் இல்லாத காரணத்தால் அழகிரி செய்யும் எந்த செயல்களுக்கு கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் இது குடும்ப பிரச்சனை என்பதால் கட்சியுடன் இதை இணைத்து பேசவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அழகிரி பேசியதே கட்சியை பற்றி தானே. அப்படி இருக்கும் போது இதை எப்படி குடும்ப பிரச்சனை என ஒதுக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.