பி.ஜே.பி.யில் எப்படி மோடியை ஒரு சீனியர் டீம் மிக கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறதோ, அதேபோல் தி.மு.க.விலும் ஸ்டாலினை சில சீனியர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடிக்கு நடப்பது போல் வெளிப்படை எதிர்ப்புகள் இங்கு இல்லை அவ்வளவுதான். ஆனால் அவ்வப்போது, ஸ்டாலினுடன் நெருக்கத்திலிருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் இவர்கள் தங்களது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பதிவு செய்வார்கள்.

அப்படித்தான் இன்று ஸ்டாலினின் செயல் ஒன்றுக்கு விமர்சனத்தை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். அது காவிரி நீர் விவகாரத்தில் முதல்வரின் அழைப்பை ஏற்று கோட்டை சென்று அவரை சந்தித்து வந்ததை ‘வேலைக்கு உதவாத செயல். இதன் மூலம் எடப்பாடிக்கு நல்ல பெயர் வாங்கி தந்திருக்கிறார்.’ என்று விமர்சித்துள்ளனர்.
இது பற்றி விரிவாக பேசியிருப்பவகள், “காவிரி விஷயத்தில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறார் தளபதி ஸ்டாலின்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்டவில்லை என்றால் தாங்கள் கூட்டுவோம் என்று சொன்னது சரியான முடிவு. உடனே ஆளுங்கட்சி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இதில் கலந்து கொண்ட பிறகும் கூட ஸ்டாலின் தனி ஆவர்த்தனம் செய்திருக்க வேண்டும். உண்ணாவிரதம்! மனித சங்கிலி! கர்நாடக எல்லையில் முற்றுகை! என்று ஏதாவது செய்திருக்க வேண்டும். காரணம், அனைத்து கட்சி கூட்டத்தை ‘மிக்சர் கூட்டம்’ என்று பல பத்திரிக்கைகள் விமர்சித்துக் கொட்டின. வெற்று வேலையாக பார்க்கப்பட்டிருக்கிறது அந்த கூட்டம்.அதன் பிறகு செய்திருக்க வேண்டிய அரசியலை தவறவிட்டுவிட்டார் தளபதி.

அதேபோல் இப்போது எடப்பாடி அழைத்தார் என்று, இன்று அவரை சந்தித்திருக்க கூடாது. என்னதான் எடப்பாடி ஸ்டாலினை அழைத்து சீன் போட்டாலும் அவரால் பி.ஜே.பி.யின் நிலைப்பாடுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. மோடி என்ன சொல்கிறாரோ அதைத்தான் வேதமாக காவிரி விஷயத்தில் முதல்வர் எடுத்துக் கொள்வார்.

ஸ்டாலின் எவ்வளவுதான் ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னாலும் அது குப்பை டப்பாவில் போடப்பட்ட காகிதங்கள்தான்.
அதனால் இப்படி எடப்பாடியை சந்தித்துவிட்டு வந்தததுக்கு பதிலாக அதை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக ‘மோடியின் விரலசைவுக்கு ஆடும் எடப்பாடி’ என்று பிளேட்டை திருப்பி வைத்து அரசியல் செய்திருக்க வேண்டும்.

இவரோ ‘எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை, ஆலோசனைக்கு அழைத்தேன். ஆனால் மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்னையில் அவர் ஒத்துழைக்கவில்லை.’ என்று அ.தி.மு.க. குறை கூறும் என்று நினைத்து அங்கு போயிருக்கிறார்.

இது சிறுபிள்ளைத்தனமான அரசியல். என்னதான் ஸ்டாலின் அங்கே போய் உட்கார்ந்து வந்திருந்தாலும் எதுவும் காவிரி விஷயத்தில் நடந்துவிட போவதில்லை. மக்கள் நலனுக்காக எதிர் கட்சியையும் அரவணைத்து செயல்படும் முதல்வர்தான் எடப்பாடி! என்று அவருக்கு பெயர் வாங்கி கொடுத்ததுதான் மிச்சம்.

முதல்வர்ஸ்டாலினை பெயருக்கு அழைத்து ஆலோசித்துவிட்டு, மோடியின் கட்டளைக்கு தலையாட்டுகிறார் எடப்பாடி. அவருக்கு தெரிந்த இந்த அரசியலை ஸ்டாலின் தவறவிட்டது அபத்தமே!” என்றிருக்கிறார்கள்.

இந்த வார்த்தைகள் சர்வ சத்தியமானதே! என்று நம்பும் ஜூனியர்களும் அதை ஆமோதித்து தலையாட்டியிருக்கிறார்கள்.