stalin demands to file case on edappadi
வாக்காளர்களுக்கு விலை கொடுத்த முதலமைச்சர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய டிடிவி தினகரன் தேர்தலுக்கான தொகுதியில் அதிகமாக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணியம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டப்படி தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விவகாரத்தில் அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியுமாறு ஏப்ரல் 18 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு விலை கொடுத்த முதலமைச்சர் மீதும் அமைச்சர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு 3 மாதமாகியும், காவல்துறை வழக்கு பதியாதது கண்டனத்திற்குரியது எனவும், பணபட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அவதிக்கும் செயலாக இது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்ய காவல்துறை தயங்குவது ஏன் எனவும், தடையாக இருப்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
