stalin demands raid in ministers home

ஊழல் பாவக்கறை படிந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளை புனிதர்களாக்காமல் வருமான வரித்துறை , அலாக்கத்துறை மூலம் சட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரித்துறை ரெய்டும், அதிமுகவிற்குள் குழப்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கைகோர்த்து பயணித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரிதாரம் பூசி அரங்கேறும் நாடகங்கள் இதைத் தான் உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றன. நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள் இன்று கைகோர்த்து தமிழக நலன் காக்கப் போகிறோம் என்று ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத்தை எடுத்திருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹைவேஸ் புகழ் முதலமைச்சர் எடப்பாடி அணியும் மணல் மாபியா சேகர் ரெட்டி வழி காட்டும் ஓபிஎஸ் அணியும் தமிழகத்தின் கஜானாவை ஜல்லிக் கரண்டி போட்டு சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஊழல் ராஜ்யத்தை ஒருங்கிணைந்து நடத்த சதித் திட்டம் போடுகிறார்கள் எனவும் அமைச்சராக தெரிவித்துள்ளார்.

 தமிழக இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டும் பெரும் பொறுப்பை மணல் மாபியா சேகர் ரெட்டி என்பவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தது தற்போது தர்மயுத்தத்தில் முதல்கட்ட வெற்றி என்று கூறும் ஓபிஎஸ் என்பது ஊருக்கே தெரியும்.

அவர்கள் திருப்பதியில் பொன்னாடை போர்த்திக்கொண்டு நின்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தொலைந்து போகாமல் மனதில் காட்சிகளாக நின்றிருக்கின்றன. 

இந்நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பண பட்டியல் கிடைத்ததாக வருமான வரித்துறை செய்தி வெளியானது. அதிமுக அம்மா அணியின் அறிவிக்கப்படாத நிதி அமைச்சராக இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

அப்போது கைப்பற்றப்படட ஆவணங்களில் இருந்த 89 கோடி ரூபாய்க்கும் விஜயபாஸ்கர் மட்டுமே சொந்தக்காரரா? அல்லது அதிமுக ஆட்சியில் கான்டிராக்ட், நியமனங்கள், திட்டங்கள் என்று திட்டமிட்டு, அறிவியல் பூர்வமாக வசூல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த அதிமுகவின் ஊழல் நிதியின் ஒரு பகுதியா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைக்கு அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தினால் மட்டும் போதும், அவர்களின் ஊழல் பற்றியோ தமிழக நலன் பற்றியோ நமக்கு என்ன கவலை, அதிமுகவின் ஊழல் ஆட்சி ஏதாவது ஒரு வடிவத்தில் இன்னும் நீடித்து தமிழகத்தின் எதிர்காலம் பாழாகட்டும் என்று நினைத்து; ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை கூண்டோடு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.