பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டை ஒரே வரியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி தான் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

2018-19ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தின் பொருளாதாரம் நல்ல பலனை அடைந்துள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத முதல்வர் பழனிசாமி அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்துவந்ததோடு, வெளிநடப்பும் செய்தனர்.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜெயலலிதா எதிர்த்ததை குறிப்பிட்டு, ஆனால் பன்னீர்செல்வமோ, ஜிஎஸ்டியால் பல நல்ல பலன்களை அடைந்துள்ளதாக கூறுகிறார் என ஸ்டாலின் விமர்சித்தார்.

ஜெயலலிதா எதிர்த்த ஜிஎஸ்டியை ஆதரித்து பேசியதன் மூலம், மத்திய பாஜக அரசிற்கு ஜால்ரா போடும் அரசுதான் தமிழகத்தில் நடக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஸ்டாலின் விமர்சித்தார்.

மேலும் ஒற்றை வரியில் இந்த பட்ஜெட்டை பற்றி குறிப்பிட வேண்டுமானால், ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி தான் இந்த பட்ஜெட் என ஸ்டாலின் விமர்சித்தார்.