அதிமுகவில் உள்ள ஒரு தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டு பார்க்க முடியாது, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற  வியூகங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக அதில் ஒரிபடி மேலேபோய் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

தமிழகத்தில் விவசாயிகளின் ஆட்சி நடைபெறுகிறது. ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி கற்க அதிமுக அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 52 லட்சம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை என கூறி வருகிறார். அதிமுக உடையும் என்றும் கூறுகிறார். எந்தக் காலத்திலும் அதிமுக உடையாது. அதிமுகவில் உள்ள ஒரு தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது. கழகம் உயிரோட்டமாக வலிமைமிக்க இயக்கமாக உள்ளது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது எவ்வளவு நெருக்கடியில் இருந்தோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

 

ஆட்சியில் 10 நாட்கள் கூட நீடிக்க முடியாது எனக் கூறினர், ஒரு மாதம், ஆறு மாதம் இருப்பாரா என்று சொல்லிக்கொண்டனர். ஆனால் 3 ஆண்டுகள் பத்து மாத காலமாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறேன். ஸ்டாலின் எப்போது சட்டமன்றத்திற்கு வந்தாரோ அப்போது நானும் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தவன். நீங்கள் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு, நான் சாதாரண கிளைச் செயலாளராக தொடங்கி படிப்படியாக முதல்வராக உயர்ந்தவன். ஆனால் ஸ்டாலின் அவர்கள் தந்தையின் செல்வாக்கில் குறுக்கு வழியில் வந்தவர். அதிமுகவை எப்படியேனும் உடைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.