சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம் என மு.க.அழகிரி ஆவேசமாக பேசியுள்ளார். 

அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் மு.க.அழகிரி பேசுகையில்;- தென் மண்டல் அமைப்புச் செயலாளர் பொறுப்பை கொடுத்தபோது கூட வேண்டாம் என்றேன். பதவிக்கு ஆசைப்படவும் இல்லை, பதவியை எதிர்பார்த்து திமுகவில் என்றுமே நான் இருந்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன், வலுக்கட்டாயமாக கலைஞர் எனக்கு கொடுத்தார்.

தென்மண்டல அமைப்புசெயலாளர் ஆனபின் திமுகவினர் எல்லோரும் என்னிடம் நடித்தனர். எனக்கு பொய் சொல்லவே தெரியாது. எப்போதும் உண்மையை பேசுவேன் என்றார்.கருணாநிதிக்கு பிறகு நீதான் என்று ஸ்டாலினிடம் நான் கூறினேன். நீதான் எல்லாம் என்றேன். என் வீட்டில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினிடம் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றேன். மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கிடைக்க நான் தான் கருணாநிதிக்கு பரிந்துரை செய்தேன்.

மேலும்,ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். ஆனால், நான் என்ன தவறு செய்தேன். எதற்காக என்னை திமுகவில் இருந்து நீக்கினீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை என்றார்.