stalin confuse about republic day

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், குடியரசு தின தேதியை மாற்றி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் திமுக பிரமுகர் தங்கவேலுவின் மகன் திருமணத்தை நடத்திவைத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பின்னர் பாவூர் சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, பழனிசாமி தலைமையிலான தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். பின்னர், கருணாநிதியின் ஆட்சியின்போது மாநிலங்களுக்கான உரிமைகளை வாதாடிப் பெற்றார் என்பதை விளக்கும் வகையில், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்களை விளக்கினார். 

அப்போது, முன்பெல்லாம் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்திலும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலும் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் கருணாநிதி வலியுறுத்தியதன் பேரில், ஆகஸ்ட் 15-ம் தேதி மாநில முதல்வர்களும் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்தில் ஆளுநரும் கொடியேற்றுவது நடைமுறைக்கு வந்தது என்று தெரிவித்தார்.

குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 25-ம் தேதி என தவறுதலாக ஸ்டாலின் குறிப்பிட்டார். இதனால், பொதுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, மேடையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏவான அப்பாவு, ஸ்டாலின் அருகே சென்று தவறை சுட்டிக்காட்டினார்.

அப்பாவு கூறியது சரியாக விளங்காததால், மீண்டும் டிசம்பர் 25, இல்லை.. இல்லை.. ஜனவரி 25 குடியரசு தினம் என மாறி மாறி பேசினார். சிறிது நேரத்தில் தவறை உணர்ந்த ஸ்டாலின், தெளிவாக பேசினார்.

குடியரசு தினத்தை ஸ்டாலின் தவறாகக் கூறியது, பொதுக்கூட்டத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.