stalin condemns central govt
மோடி விரும்புவதை தான் மக்கள் சாப்பிட வேண்டும் என்றால் உணவு உரிமை என்னானது என மாட்டிறைச்சிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் குறிப்பிடும்படி மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த போது பிரதமர் மட்டும் இந்தியா கிடையாது எனவும் ஒவ்வொரு முதலமைச்சரும் சேர்ந்து தான் இந்தியா என தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது.ஒரு மத்திய அமைச்சர் தமிழகம் வந்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மிரட்டி சென்றுள்ளார். இதை விட ஒரு வெட்ககேடு இருக்கிறதா?
மத்திய அரசு முழுமையாக மாநில அரசின் உரிமைகளை பறிக்க பார்க்கிறது.

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த போது கூட உச்ச நீதிமன்றம் அது மாநில கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மறுப்பு தெரிவித்தது.
அவ்வாறு இருக்கையில் மோடி எதை சாப்பிட சொல்கிறாரோ அதை தான் மக்கள் சாப்பிட வேண்டும் என்றால் உணவு உரிமை என்னாவது?
பா.ஜ.க வாக்குறுதி கொடுத்த ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை. எனவே இச்சட்டத்தின் மூலம் அதை மறைக்கபார்க்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
