stalin condemned the central commission doctor opinion
டெங்குவால் 40 பேர் இறந்தது பெரிதல்ல என கருத்து தெரிவித்த மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸை உடனடியாக குழுவில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தினமும் சராசரியாக 10-க்கும் மேற்பட்டோர் இறந்துகொண்டிருக்கின்றனர். தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும்போதிலும் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மருத்துவர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை என்று தமிழகத்தில் டெங்கு பாதிப்பை பார்வையிட வந்திருக்கும் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பு என்ற அடிப்படை உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல், ஒரு மருத்துவர் இப்படி அறிவித்திருப்பது அகங்காரம் மிகுந்த ஒன்றாக இருக்கிறது.
மத்திய அரசு என்ன காரணத்திற்காக இந்தக் குழுவை மாநிலத்திற்கு அனுப்பியதோ அந்த நோக்கத்தை குழுவின் விசாரணை முடியும் முன்பே சிதறடிக்கும் முயற்சியாகவே மருத்துவரின் பேட்டி அமைந்துள்ளது.
40 பேர் இறந்தது ஒன்றும் பெரிதல்ல, என்ற அந்த மருத்துவரின் கருத்தையே முதலமைச்சர் எடப்பாடி ழனிசாமியும் ஒப்புக்கொண்டு அமைதி காக்கிறாரா? தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, டெங்குவால் மரணமடைந்தோரை இழிவுபடுத்திப் பேசும் இது போன்ற பேட்டிகளை, அவர் எப்படி மறுக்காமல் இருக்கிறார்?
மக்கள் துயரப்படும் போது அரசால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்வதென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கடமைதான் என்ன என்ற கேள்வி அடிப்படையாகவே எழுகிறது. ஆகவே, மக்களை பீதியடைய வைக்கும் வகையில் பேட்டியளித்த மருத்துவர் அஷ்தோஸ் பிஸ்வாஸை, மத்திய குழுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய குழு டெங்குவை ஒழிக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆய்வினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவிடம் கேட்டுக்கொள்வதா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
