சட்டமன்றத்தில் நடைபெற்ற சிறு களேபரத்தில் கிழியாத தன் சட்டை, கிழிந்துவிட்டதாக ஸ்டாலின் ஸீன் போட்டார்! என்று ஒரு பரபரப்பு உருவானது. சட்டையை கழட்டிவிட்டுக் கொண்டு, உள் பனியன் தெரிய ஸ்டாலின் நடந்து வந்து கொடுத்த போஸ் ஆனது செம்ம டிரெண்டிங்கில் இருந்தது. 
ஆனால் அப்போதெல்லாம் கழுவிக் கழுவி ஊற்றப்பட்டதை விட, இப்போதுதான் அதிகமாக நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆம்! எடப்பாடியாருக்கு போட்டியாக மத்திய அரசை வாயார புகழ துவங்கியுள்ளவர், இந்த விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடியாராகவே மாறிவிட்டார்!  என்று வெளுத்துக் கட்டிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். 


விவகாரம் இதுதான்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றியை பெற்றது தி.மு.க. கூட்டணி. இதன் பின் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான மிக கடுமையான விமர்சன தாக்குதல்களில் இறங்கினார் ஸ்டாலின். காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தில் இந்த தேசத்தின் வேறெந்த எதிர்க்கட்சியும் காட்டிவிடாத கோபத்தை மோடி அரசு மீது ஸ்டாலின் காட்டினார். இதில் மோடியும், அமித்ஷாவும் மிகவும் அப்செட்டாகினர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு வானொலியுமே புகழ்ந்து பேசுமளவுக்கு ஸ்டாலினின் காஷ்மீர் நடவடிக்கை எதிர்ப்பு இருந்தது. 


இந்த நிலையில் தமிழகத்தில் கட்டாய இந்தி! விவகாரத்தையும் கையிலெடுத்து தாண்டவமாட துவங்கினார் ஸ்டாலின். ‘நாங்கள் இந்தியை கட்டாயமாக திணிக்கவில்லை.’ என்று அமித்ஷா விளக்கம் சொல்லிய அன்று, இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக தமிழக கவர்னரை சந்தித்தார் ஸ்டாலின். அதன் பின் வெளியே வந்தவர் அப்படியே தலைகீழாக பேசி நகர்ந்தார். 
இது மிகப்பெரிய சர்ச்சையாகி, அலசலுக்கு ஆளானது. ‘தி.மு.க. முக்கியஸ்தர்களின் ஊழல் பட்டியலையும், கருணாநிதி குடும்பத்தின் சொத்து குவிப்பு பட்டியலும் அடங்கிய ஃபைலை ஸ்டாலினிடம் எடுத்துக் காட்டிய கவர்னர், கூறிய சில விஷயங்களும், அட்வைஸ்களுமே ஸ்டாலினை  இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வைத்துள்ளது. இனி மோடி அரசை வன்மையாக மட்டுமல்ல கடுமையாக கூட ஸ்டாலின் எதிர்க்க மாட்டார்.’ என்று இதற்கு விளக்கமும் அளித்தனர் விமர்சகர்கள். 

அட விமர்சனம் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. அப்படியே பல்டி அடித்து, மோடியை புகழ துவங்கிவிட்டார் ஸ்டாலின் என்பதுதான் ஷாக்கே. சென்னையில் நடந்திருந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த மோடி, தமிழின் தொன்மையை பற்றி பேச, அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து புகழ்ந்து கொட்டினார் ஸ்டாலின். 
அடுத்து இப்போது சீன அதிபருடனான உச்சி மாநாடுக்காக தமிழகத்தை மோடி தேர்ந்தெடுத்து வருவதையும் தாறுமாறாக புகழ்ந்துள்ளார். ‘சீன அதிபருடன், பிரதமர் மோடி நடத்தும் நல்லுறவு பேச்சு, மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமைதரக்கூடியது. இதற்கு தமிழகத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி. சீன அதிபருடன் நம் பிரதமர் மோடி நடத்தும் இரு நாட்டு நல்லுறவு பேச்சு, தமிழகத்திற்கு  பெருமை தரக்கூடியது.’ என்று தி.மு.க. தலைவர் புகழ்ந்து உருகியிருக்கிறார். இந்த தகவல் பிரதமரை சென்றடைய அவரும் செம்ம ஹேப்பியாம். 

இந்த நிலையில்தான் நெட்டிசன்கள் “மோடியை புகழ்ந்து நெருங்குவதில் எடப்பாடி மற்றும் ஸ்டாலினிடையே பெரும் போட்டி உருவாகியுள்ளது.  முன்னவரை இரண்டாமவர் பீட் செய்துவிடுவார் போல. முழுசாக எடப்பாடியாராக மாறும் ஸ்டாலினைப் பார்! பார்!” என்று சந்திரமுகி டயலாக்கை போட்டு சதிராடியுள்ளனர். 
ஏனுங்க தி.மு.க.நிர்வாகிகளே அப்ப அந்த ராஜ்பவன் ரகசியங்கள் உண்மைதானோ?