தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தைப் பார்த்த ஸ்டாலின் இதனைப் பாராட்டியதோடு பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த  பாமக ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்றும் அதை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பாரா ? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு ஸ்டாலின், “பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், ராமதாஸ் சொன்னதை நிரூபிக்கத் தவறினால் அவரும், அன்புமணி ராமதாஸும் அரசியலை விட்டு விலகத் தயாரா” என்றும்  சவால் விடுத்தார்.

இதுதொடர்பாக ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த ராமதாஸ், நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து இன்று  டுவிட்டரில்  அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “நான் விடுத்த அறைகூவலை மருத்துவர் அய்யா ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார். 

மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்! விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்” என்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.


தற்போது பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை பெரிதாகி வருவது தமிழக அரசியல்வாதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.