ஊழல் குற்றச்சாட்டுக்கு தடை பெற்ற வழக்கை வாபஸ் பெற்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய  மு.க.ஸ்டாலின்;- தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த தொல்லைகளுக்கு முடிவுகட்ட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி. அந்த ஆட்சி மாற்றத்தை தரப்போகும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியமாகும். அதற்காகவே பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் திட்டத்தை தி.மு.க. முன்னெடுக்கிறது.

கொரோனா காலத்திலும், நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளோம். ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் எதிர்கட்சியாக நாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி எனவும், பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் கூட அதிமுக அரசு ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

நாளை ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் திறக்க இருக்கிறார்கள். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் ஜெயலலிதா மணிமண்டபத்தை திறக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு பூஜிக்கும் அவர்கள் ஜெயலலிதாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடிந்ததா?

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ 4000 கோடி ஊழல் நடந்து இருப்பதையும், அந்தப்பணம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்து தி.மு.க. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சி.பி.ஐ. வழக்குக்கு பரிந்துரை செய்தது. தைரியம் இருந்தால் அந்த வழக்கை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் இப்போது நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் தயார்தான். நான் சொல்லும் இடத்தில் கூட வேண்டாம் நீங்கள் சொல்லும் இடத்திற்கு கூட இப்போதே வருகிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள். ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி விசாரிக்கக் கூடாது என்பதுதான் மரபு எனவும் தெரிவித்துள்ளார்.