வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி  சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். இதே போல்  திமுக வேட்பாளரை ஸ்டாலின் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதற்கான நேற்றிரவு  வேலூர் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை உழவர் சந்தை வழியே நடைபயிற்சி செய்த அவர் அங்கிருந்த காய்கறி விற்பனை செய்வோர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவர்களுடன் ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்டார்.

தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்தவர்கள், ஆட்டோவில் பயணம் செய்தவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஒரு கட்டத்தில் ஸ்டாலின், துரை முருகன் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த்  ஆகியோர் தெருவோர கடையில் டீ அருந்தியபடி வாக்கு சேகரித்தனர்.