Asianet News TamilAsianet News Tamil

 எடப்பாடியும் நானும் இதைதான் பேசினோம்...! ஸ்டாலின் ஓபன் டாக்...!

stalin byte about edappadi meeting
stalin byte about edappadi meeting
Author
First Published Mar 3, 2018, 11:38 AM IST


பிரதமர் தங்களை சந்திக்க மறுப்பதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு தகவல் வந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றம் வழங்கிய நீரிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தமிழகத்திற்கு பாதிப்பாக இருந்தாலும், தமிழகம் வலியுறுத்திய காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதுதான் இறுதி தீர்ப்பு என்பதால், இந்த முறை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையே காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடத்தப்பட்ட ஆலோசனையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.  

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொலைபேசியில் பேசினார்.

இதையடுத்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி அழைப்பின் பேரில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு வருகை புரிந்து ஆலோசனை நடத்தினர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பிரதமர் தங்களை சந்திக்க மறுப்பதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு தகவல் வந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கூறியதாக தெரிவித்தார். 

மேலும் வரும் திங்கட்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வரும் எனவும் இல்லையென்றால் வரும் 8 ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டுவதாக எடப்பாடி உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios