திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதனையடுத்து, நிகழ்ச்சியின் போது முதல்வர் பேசுகையில்;- கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களை காக்கும் மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொள்கிறார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதல்வர், இலவச தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாக தன்னை தாராள பிரபுவாக காட்டிக்கொள்ள போடும் நாடகத்தை காண சகிக்கவில்லை கடுமையாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது. கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு ஸ்டாலின் பதட்டப்படவேண்டாம். கொடுக்கின்ற குணல் வள்ளல் வாரிசுகளுக்கே வரும். 2021லும் அதிமுக ஆட்சியே மலரும். இதுவே இனி சரித்திரம் என கூறியுள்ளார்.