தமிழகத்தை அரைநூற்றாண்டு காலமாக அனைத்து கட்சிகளும் ஆட்சி செய்து விட்டன. ஸ்டாலின் கூட அவரது கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர், இப்போது அவருடைய முதல்வர் கனவு நிறைவேறிவிட்டது.

திமுகவில் நீண்டகாலம் உழைத்தவர் ஸ்டாலின் அவர் இப்போது முதல்வராக இருக்கிறார், அடுத்து இருப்பது நாம் தான், விரைவில் பாமக ஆட்சி அமைப்பது தான் நீதி நியாயம், எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்து மாற்றத்தை தொடங்குவோம் என அன்புமணி பேசியிருப்பது அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக- திமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியிலிருந்த பாமக இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. பாமகவின் இந்த முடிவு அதிமுக, பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மட்டும்தான் தனித்துப் போட்டியிடயே தவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருகிறோம் என கூறி ஆறுதலை ஏற்படுத்தினர். 

ஆனால் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில், விரைவில் பாமகவின் ஆட்சி என அன்புமணி பேசி வருவது அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரை மீண்டும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் பொய்கையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பாமகவால் மட்டும்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும், அதற்கு பாமகவின் ஆட்சி அமைய வேண்டும், எம்பி, எம்எல்ஏக்களைவிட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தான் அதிகாரம் அதிகம், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்த பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடித்துக் கொடுக்க வேண்டும் அந்த அளவிக்கு உள்ளாட்சி மன்ற பதவிகள் அதிகாரம் மிக்கது என்றார். 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஏதோ திடீரென கிடைத்து விட்டதாக கூறுகிறார்கள், கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா ஓடாய் தேய்ந்து ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி அதன் விளைவாகக் கிடைத்த தான் இட ஒதுக்கீடு. எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை இருந்த அத்தனை முதல்வர்களிடமும் இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தாயிற்று, ஆனால் அய்யா நடத்திய போராட்டத்தால் தான் மட்டுமே இந்த இட ஒதுக்கீடு கிடைத்தது. இட ஒதிக்கீடு பிரச்சனையை கட்சிப் பிரச்சினையாக பார்க்கவில்லை, இதை சமூக நீதி பிரச்சனையாக பார்க்கிறோம், வன்னியர் சமூதாயம் போன்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் மருத்துவர் அய்யா போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவார். ஒன்றை நாம் உறுதி ஏற்போம், பாமக ஆட்சி மலர வேண்டும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்து அந்த மாற்றத்தை நாம் தொடங்குவோம் என்றார்.

தமிழகத்தை அரைநூற்றாண்டு காலமாக அனைத்து கட்சிகளும் ஆட்சி செய்து விட்டன. ஸ்டாலின் கூட அவரது கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர், இப்போது அவருடைய முதல்வர் கனவு நிறைவேறிவிட்டது. அடுத்து நாம் தான் இருக்கிறோம், அடுத்து நம்முடைய ஆட்சி அமைவதுதான் நியாயம், நீதி, அதற்காக அனைவரும் தயாராக இருங்கள் என அவர் கூறினார். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக பாமக கூறினாலும், இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் இருந்து மாற்றத்தை தொடங்குவோம் என அன்புமணி மேடைதொறும் பேசிவருவது, கூட்டணியை விட்டி எதிர் வரும் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடப்போவதற்கான அச்சாரமாக இருக்க கூடுமோ என்ற அச்சம் தேஜக கூட்டணியில் எழுந்துள்ளது.