Asianet News TamilAsianet News Tamil

திருட்டு கும்பலுக்கு சப்போர்ட் பண்ணலாமா? இதுல ஏதோ மர்மம் இருக்கு... பொன்.மாணிக்க வேலுக்காக அரசை எதிர்க்கும் ஸ்டாலின்

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்தும் ஐ.ஜி. மீதே குற்றம் சுமத்தும் சர்வ அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அதிமுக அரசு அளித்து ஊக்கமளித்தது.

Stalin assertion IG Pon Manickavel investigate

சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது” என்று அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தின் முன்பு தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது. அதிலும் குறிப்பாக உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் அதிமுக அரசு இப்படியொரு திடீர் நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே தெரிகிறது.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. திரு பொன்மாணிக்கவேலு நியமனம் உள்ளிட்ட கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது தொடர்பாக ஏறக்குறைய 20 கட்டளைகளை 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்தது.

மாண்புமிகு நீதியரசர் மகாதேவன் அவர்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், எடுத்த எடுப்பிலேயே டி.ஜி.பி. மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அதிமுக அரசு. ஆனால் அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பிறகும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்ற அதிமுக அரசு முன் வரவில்லை.

முதலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சிலை திருட்டு தடுப்புப் பிரிவிற்கு நியமிக்கவே தயங்கியது. விசாரணைக்குத் தேவையான எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க மறுத்தது. வழக்கின் முக்கிய விவரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவிடம் கேட்டு டி.ஜி.பி.யே வற்புறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்தும் ஐ.ஜி. மீதே குற்றம் சுமத்தும் சர்வ அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அதிமுக அரசு அளித்து ஊக்கமளித்தது.

அரசின் ஆதரவுடன் இந்து சமய அறநிலையத்துறை நடத்திய “ஒத்துழையாமை இயக்கம்” சிலை திருட்டுகளை கண்டுபிடிப்பதற்கு பெரிய தடைக்கல்லாக நின்றது. அதுவும் போதாது என்று உயர்நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே, விசாரணை நடத்தி வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை மாற்றினார்கள். இப்படி அடுத்தடுத்த அத்துமீறல்களைக் கவனித்த உயர்நீதிமன்றம், டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளருக்கு நான்கு முறைக்கு மேல் கண்டனம் தெரிவித்தது.

“உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காதது ஏன்? “ என்று நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது ,“ சிலை திருட்டுகளை கண்டுபிடிக்க அரசு போதிய ஆதரவு அளித்து வருகிறது. உயர்நீதிமன்றம் கூறியபடி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம்” என்று சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் பதிலளித்தார்.

அப்படி பதிலளித்த ஒரு மாதத்திற்குள் இன்றைக்கு திடீரென்று மனம் மாறி, “சிலை திருட்டு விசாரணையில் அரசுக்கு திருப்தி இல்லை” என்றும், “ஒரு துறை (சிலை தடுப்புப் பிரிவு) இன்னொரு துறையை (அறநிலையத்துறை) காயப்படுத்துகிறது” என்றும் தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பமயமான நிர்வாகத்திற்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது. “சிலை திருட்டு வழக்குகளையும், எதிர்காலத்தில் வரும் இது போன்ற வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருப்பதைப் பார்த்தால் உயர்நீதிமன்றம் கண்காணிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சிலை திருட்டு தடுப்புப் பிரிவையே கலைத்து விடுவதற்கு அதிமுக அரசு தயாராகி வருவதுபோல் தெரிகிறது.

“குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பத் தேவையில்லை” என்று உயர்நீதிமன்றத்திடம் வாதாடித் தோற்று, பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதிட்டது தமிழக அரசு. இன்று உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றப் போகிறோம் என்று தெரிவிப்பது அதிமுக அரசின் படு மோசமான நிர்வாக தோல்வியைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Stalin assertion IG Pon Manickavel investigate

சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி.க்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அதிமுக அரசு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கைது செய்தவுடன், அந்த ஐ.ஜி. மீதே நம்பிக்கையில்லை என்றும், ஒரு வருடமாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்திருப்பதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே ஒரு நீதிபதிக்குப் பதில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுகிறோம் என்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றே சந்தேகிக்கிறேன்.

ஆகவே சி.பி.ஐ.க்கு மாற்றும் முடிவினை கைவிட்டு, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கண்காணிக்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி திருடு போன கோயில் சிலைகளை முறையாகக் கண்டுபிடிப்பதற்கு வழி விட்டு நியாயம் நடைபெற அதிமுக அரசு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios