நடிகர் கமல் கருத்து தெரிவித்த பிறகு, இணையதளங்களில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பெயர்கள் மாயமானது வெட்க கேடானது. வேதனையாக இருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்தியை கொண்டு வருவோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் இந்தி நுழைய வாய்ப்பே இல்லை. நாங்கள் விடவும் மாட்டோம்.

அப்படி இந்தியை திணிக்க நினைத்தால், மக்கள் மன்றத்தில் பேசி, போராட்ட களத்தில் குதிப்போம். 1962ம் ஆண்டு நடந்த போராட்டம் போல், பெரிய அளவில் மக்களை திரட்டி, திமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு செய்திகளையும் வாட்ஸ்அப், டுவிட்டர் மூலம் அந்தந்த நிமிடங்களில் அனைவரும் அறிந்து கொள்கிறார்கள். இதில், அனைத்து ஊழல்கள், குற்றச்சாட்டுகள், பல்வேறு சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

இதுபோன்று மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில்,இருக்கும்போது, அமைச்சர்கள் தங்களது பெயர்களை இணையதளங்களில் இருந்து நீக்கியது வெட்கக்கேடான விஷயம். மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழக அரசின் ஆட்சியில் ஊழல் நிறைந்து இருக்கிறது என நடிகர் கமல் கூறியது 100 சதவீதம் உண்மை. அவர், தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோளாவே கூறியுள்ளார். இணைதளத்தில் புகார் செய்யும்படி மட்டுமே கூறினார். இதில் எந்த தவறும் இல்லை. அமைச்சர்கள் தவறு செய்யாவிட்டால், ஏன் அதை முடக்க வேண்டும்.