பதவிவெறி பிடித்த கட்சிதான் திமுக, தங்களது குடும்பம் மலர உழைக்கும் கட்சிதான் திமுக, காவல்துறையை மிரட்டும் கட்சிதான் திமுக என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடுக்கடுக்காக திமுகவை சாடியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியதாவது:  தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க தயாராக உள்ளனர்.  

அதிமுக கரை வேட்டி கட்டினாலே அனைவருக்கும் தைரியம் வரும்.  மொத்தத்தில் பதவி வெறி பிடித்தவர்கள் திமுகவினர், தங்களது குடும்பம் மலரே உழைக்கும் கட்சிதான் திமுக, ஆனால் மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம், மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி அதிமுக. காவல்துறை உயர் அதிகாரிகளையே கூட மிரட்டும் கட்சிதான் திமுக,  ஆனால் அதிமுக மக்களுக்கான கட்சி மக்களை காக்கின்ற கட்சி. குறிப்பாக அதிமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு இல்லை, அதிமுக மீது நல்ல எண்ணங்களே மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அவற்றை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதிகார துஷ்பிரயோகம் செய்த ஆட்சி திமுக ஆட்சி, தமிழகத்தில் 410 ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேற்றியது தமிழக அரசு. 

மொத்தத்தில் திமுக தெரியாமல் ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை விரட்டியடுக்க வேண்டும். கழகத்தில்  இளைஞர்களை மூத்த நிர்வாகிகள் போட்டியாக கருதாமல் அவர்களை தட்டிக் கொடுத்து பணி செய்ய வழி விட வேண்டாம்.  எப்போதும் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கிறவர்கள்தான் அதிமுகவினர், ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறனுக்கு காவடி தூக்க வேண்டும், திமுகவின் உழைப்பிற்கு மரியாதை கிடையாது.  2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி இளைஞர்கள் மற்றும் பெண்கள் கையில்தான் உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சராக நாம் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.