திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளருக்கு  ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும் என தெரிவித்தார்..

ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

திமுகவுடன் இணைந்து  அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது  என குறிப்பிட்டார்.

பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அதிமுகவை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.