கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் செயலாளர் ராமலிங்கம் அப்பகுதியில் சிலர் மதமாற்றம் செய்ய முயற்சித்தார்கள் என்பதற்காக அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


 
இதையடுத்து இந்த சம்பவம் நடந்த அதே நாளில் இரவு ராமலிங்கம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பே ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக   குவிக்கப்பட்டுள்ளனர்.  பாஜக மற்றும் ஒரு சில இந்து அமைப்புகள் மட்டுமே இந்த கொலைக்கு கண்டன் தெரிவித்திருந்தன.

ஆனால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில் இந்த கொலையை கண்டித்து எந்தவொரு பெரிய கட்சியும் குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை என பொது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியது.

இந்நிலையில் . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்! 

இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதே போல் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ,  'ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்யவேண்டும். வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல; ஒரு உயிரைப்பறித்து அதில் சுகம் காண்பது என்பது மிகக்கொடூரமான மனநிலையாகும். எதன் பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது' என்று கூறியுள்ளார்.

ராமலிங்கம் கொலை செய்யப்பட்டு இத்தனை நாளுக்குப் பிறகாவது இந்தத் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க மனசு வந்தததே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.