ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் இப்போது அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன பதவி கிடைத்ததும் அமைதியாக விட்டாரா.? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்விமேல் கேள்வி எழுப்பிவருகிறார்.

விக்ரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாங்குநேரி தொகுதியில் உள்ள கட்டும்போடுவாழ்வு என்ற பகுதியில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார், அப்போது பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் அதில் தங்கள் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதால் அதிமுக தேர்தலை  தள்ளிப்போடுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.   திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதுதான் என்று கூறிய அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.  அந்த நம்பிக்கை தனக்கும் மக்களுக்கும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதுள்ள  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பாஜகவுக்கு அஞ்சி நடுங்குகிறது என்ற ஸ்டாலின், ஜெயலலிதா யாருக்கும் எதற்காகவும் அஞ்சாத தலைவராக  இருந்தார் என்றார். ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அவரது உடலுக்கு  திமுக தலைவர் கருணாநிதி தன்னை அஞ்சலி செலுத்த வேண்டும் என தன்னிடம் கூறினார் அதன்படி தான் அஞ்சலி செலுத்தினேன் என்று அப்போது ஸ்டாலின் கூறினார். அதே நேரத்தில் , ஜெயலலிதா மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் இப்போது மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பதவி கிடைத்ததால் அவர் அமைதியாகிவிட்டாரா என்றும்  சரமாரியாக ஒபிஎஸ்ஸை விலாசினார். 

 

இதே நேரத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி,  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி ஓபிஎஸ், விசாரணை ஆணையம்  ஐந்து முறைக்குமேல் அழைத்தும் ஒருமுறைகூட ஆஜராகவில்லையே ஏன் என்றும் அவரது பங்குக்கு  அவரும் கேள்வி எழுப்பு ஒபிஎஸ்ஸை டார்கெட் செய்துள்ளார்.  எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதை விட ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சிப்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் குறியாக இருந்துவருவதை காணமுடிகிறது.