மதுரை பப்பீஸ் ஓட்டலில் ஒரே ஒரு நாள் தங்கி படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் டி.டி.வி தினகரன். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த செவ்வாயன்று தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழா அன்று வருடம் தவறாமல் தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தும் வழக்கத்தை மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பசும்பொன்னில் செவ்வாயன்று நடைபெறும் விழாவில் பங்கேற்க கடந்த திங்களன்றே மதுரை சென்றுவிட்டார் ஸ்டாலின். 

வழக்கமாக மதுரை சென்றால் அங்குள்ள சங்கம் ஓட்டலில் தான் மு.க.ஸ்டாலின் தங்குவார். ஆனால் இந்த முறை அவர் சங்கம் ஓட்டலில் தங்கவில்லை. அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்கிற விவரமும் வெளியே கசியவிடப்படவில்லை. தி.மு.கவின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டுமே ஸ்டாலின் எங்கு தங்கியிருக்கிறார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செவ்வாயன்று காலை மு.க.ஸ்டாலின் பப்பீஸ் ஓட்டலில் இருந்து வெளியே வந்ததை பார்த்த பலருக்கும் ஆச்சரியம். 

ஏனென்றால் அதே பப்பீஸ் ஓட்டலில் தான் தினகரனும் தங்கியிருந்தார். தினகரனும் – ஸ்டாலினும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்த தகவல் வேகமாக பரவியது. சில ஊடகங்கள் ஸ்டாலின் – தினகரன் ரகசிய சந்திப்பு என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. இதனை வசமாக பிடித்துக் கொண்ட ஆளும் அ.தி.மு.க தரப்பு ஸ்டாலினுடன் இணைந்த அ.தி.மு.க அரசை கவிழ்க்க தினகரன் முயற்சிப்பது அம்பலமாகிவிட்டது என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர்.

  

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரோ, மதுரையில் தினகரனும் – ஸ்டாலினும் சந்தித்து பேசியது உண்மை என்று திட்டவட்டமாக கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது உண்மை தான் என்றும், ஆனால் ஸ்டாலினை தான் சந்திக்கவில்லை என்றும் சத்தியம் செய்யாத குறையாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அ.தி.மு.க தரப்பு தொடர்ந்து தினகரன் – ஸ்டாலின் சந்திப்பை பூதாகரமாக்கி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மவுனமாக இருப்பது தினகரன் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.கவின் பரம வைரியான அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு ஸ்டாலினை எப்படி தினகரன் சந்திக்கலாம் என்று முக்கிய நிர்வாகிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

போதாக்குறைக்கு அ.ம.மு.க தொண்டர்களும் கூட நிச்சயமாக ஸ்டாலினை தினகரன் சந்தித்து இருப்பார், கடந்த வருடம் ஓ.பி.எஸ்சையே சந்தித்தவர் அல்லவா தினகரன் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனது இமேஜ் டேமேஜ் ஆவதை உணர்ந்த தினகரன், நிர்வாகிகளை தானே தொடர்பு கொண்டு தான் ஸ்டாலின் இருக்கும் ஓட்டலுக்கு செல்லவில்லை, ஸ்டாலின் தான் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.