Stalin and Congress walked out with Ansari to oppose Governors speech on the day of the Tamilnadu assembly session
ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் தன் கட்சி சாராத 3 பேருக்கு வாழ்வளித்தார். தனியரசு, தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோரே அவர்கள். ஜெ., மரணத்துக்குப் பின் இவர்களில் தனியரசு தனக்கு சாதகமான நிலைப்பாடை சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கிறார்! கருணாஸோ ‘நான் எப்போதுமே சசிகலாவின் விசுவாசி’ என தடாலடியாய் அறிவித்துவிட்டார். எஞ்சியிருக்கும் அன்சாரி மட்டுமே கொள்கைகள், பிரச்னைகளின் அடிப்படையில் அரசை ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாய் இருக்கிறார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்த நாளன்று கவர்னரின் உரையை எதிர்த்து ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் அண்ட்கோவுடன் வெளிநடப்பு செய்தார் அன்சாரி. இது அவர் மீது ‘தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு நிலை எடுக்கப்போகிறார்.’ எனும் சாயத்தைப் பூசியிருக்கிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்திருக்கும் அன்சாரி “டெல்லி மற்றும் புதுவையில் முதல்வர்களுக்கு குடைச்சல் கொடுப்பது போல் தமிழகத்திலும் ரெட்டை நிர்வாக முறையை கையிலெடுக்கிறது பி.ஜே.பி. அதன் கருவியாக செயல்படுபவர் கவர்னர். அதனால்தான் அவரது உரையை எதிர்த்து வெளிநடப்பு செய்தேன்.

இதற்காக நான் தி.மு.க.வின் அணியை ஆதரிக்கிறேன், அணி மாறுகிறேன் என்று பேசுவது அடிப்படையற்ற விமர்சனம். மக்கள் பிரச்னைக்காகத்தான் அரசியல் நடத்துகிறேனே தவிர சுய பிழைப்புக்காக இல்லை.” என்றவர் அடுத்து பேசியிருப்பதுதான் ஹைலைட்...
“ராதாகிருஷ்ணன் நகரில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் ஈட்டியுள்ள வெற்றி என்பது கட்சி சாராத பொதுமக்கள் மத்தியில் அவரை கதாநாயகனான மாற்றியுள்ளது.
சட்டசபைக்கு முதல் நாள் தினகரன் வரும்போது அவரை பற்றி அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தி.மு.க., காங்கிரஸ், முஸ்லீம் லீக், தனியரசு, நான் உட்பட அனைவரும் அரசியல் நாகரிகம் கருதி வாழ்த்தினோம்.

ஆளுங்கட்சியினர் அவரை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரை பிரமிப்பாக பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம். ஆனாலும் அவரை தள்ளி வைக்கவும் முடியவில்லை, அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கவும் முடியவில்லை அவர்களால்.
ஆனால் அவரது வெற்றி மக்கள் மத்தியில் அவரை கதாநாயகனாக மாற்றியுள்ளது யதார்த்தம்.” என்றிருக்கிறார்.
பின்ன என்ன பாஸு! ஆக்ஷன ஆரம்பிக்க தினா!
