உதயநிதி போட்டோவுடன் தி.மு.கவினர் பிளக்ஸ் போர்டுகள் வைக்கவும் நியுஸ் பேப்பர் விளம்பரங்கள் செய்யவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள அனுமதி, தனது அரசியல் வாரிசு உதயநிதி தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கலைஞர் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் என தேசிய தலைவர்கள் வருகையால் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானமே கலை கட்டியிருந்தது. ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்த தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கண்களை கவர்ந்தது அங்கு வைக்கப்பட்டிருந்த உதயநிதி பிளக்ஸ் போர்டுகள் தான்.

அதுவும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக உதயநிதியை வாழ்த்தியும், வரவேற்றும் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள்  வைக்கப்பட்டிருந்தன. இதுநாள் வரை தி.மு.க சார்பில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் உதயநிதி புகைப்படம் சிறிய அளவில் இடம் பெற்று இருக்கும். ஆனால் சென்னையில் உதயநிதி படத்தை பிரமாண்டமான அளவில் வைத்து பிளக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுவும் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் இந்த பிளக்ஸ்கள் வைக்கப்பட்டது தான் ஹைலைட்.

ஏனென்றால் தனி நபர்கள், உதயநிதி ரசிகர்கள் இதுநாள் வரை அவரை ஐஸ் வைப்பதற்காக தங்களது சுய விருப்பத்தின் பேரில் பிளக்ஸ் வைத்து வந்தனர். ஆனால் தி.மு.கவில் நிர்வாகிகளாக இருப்பவர்களை வாழ்த்தியோ வரவேற்றோ மட்டுமே அக்கட்சியின் மாவட்ட கழகங்கள் சார்பில் பிளக்ஸ்கள் வைக்கப்படும். ஆனால் கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத உதயநிதியை வரவேற்று காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க பிரமாண்டமாக பிளக்ஸ் ஸ்டாலினிடம் அனுமதி பெற்றுத்தான் என்கின்றனர் அந்த கட்சியினர்.

ஸ்டாலினும் கூட தற்போது முதலே தனக்கு பிறகு தி.மு.கவில் யார் என்பதை காட்டி ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.எனவே தான் தலைவராக தான் பதவி ஏற்ற நாளில் தன்னுடனேயே உதயநிதியை அழைத்துக் கொண்டு வந்தார். தற்போது தி.மு.க சார்பில் அதிகாரப்பூர்வமாக வருங்காலமே என்று உதயநிதியை வரவேற்று பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் உதயநிதிக்கு தி.மு.கவில் பொறுப்பு வழங்கப்படுவது உறுதி என்கின்றனர் அக்கட்சியினர்.