ரஜினிக்கு தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விட இரண்டாவது மகள் செளந்தர்யா மீது அன்பு அதிகம். அதற்கு ரொம்பவே பர்ஷனலாக சில காரணங்கள் உண்டு. அந்த வகையில் செளந்தர்யாவின் முதல் திருமணம் காதல் திருமணம் என்றாலும் கூட அதற்கு முழு சம்மதம் தெரிவித்து ஏக பிரம்மாண்டமாக அதை நடத்தினார். 

மாப்பிள்ளை அஸ்வினின் குடும்பமும் மிகப்பெரிய குடும்பம். ஆனால் யார் கண்பட்டதோ விவாகரத்தில் முடிந்துவிட்டது அந்த திருமணம். இப்போது இரண்டாம் திருமண பந்தத்தினுள் நுழைகிறார் செளந்தர்யா. இதுவும் காதல் திருமணம்தான். இதுவும் மிகப்பெரிய இடம்தான். இதற்கும் முழு சம்மதம் தெரிவித்து, தடபுடலாக கல்யாணத்துக்கு தயாராகி வருகிறார். இது இரண்டாம் திருமணம் எனும் நெருடல் எந்த இடத்திலும் பாச மகளின் மனதில் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார் ரஜினி. 

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ தன் அப்பாவை வகையான அரசியல் பஞ்சாயத்துக்குள் தள்ளியிருக்கிறார் செளந்தர்யா. அதாவது....செளந்து இப்போது திருமணம் செய்ய இருக்கும் விசாகனின் குடும்ப பின்னணி தி.மு.க.வை சார்ந்தது. செளந்துவின் வருங்கால மாமனரான வணங்காமுடியின் சொந்த அண்ணன் பொன்முடி, கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வில் மிக மிக முக்கியமானவர். சூலூர் தொகுதி எனப்படும் கொங்குக்கு சம்பந்தமில்லாத தேவர் சமுதாயம் அடர்த்தியாக இருக்கும் தொகுதில் காட்ஃபாதராகவே பார்க்கப்படுகிறார். 

மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்முடி. அவரது தம்பி, இந்தியாவின் மிக  முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவன அதிபர்களில் ஒருவர் எனும் வகையில் வணங்காமுடியும் தி.மு.க. தலைமையோடு ஏக நெருக்கத்தில் இருக்கிறார். அதனால்தான் சமீபத்தில், மகன் விசாகன் உள்ளிட்ட தன் குடும்பத்தினரோடு சென்று ஸ்டாலினுக்கு பத்திரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அழகிரிக்கு அவர் பத்திரிக்கை வைத்தாரா எனும் தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், மருகமகன் குடும்பத்தை அணுசரித்துப் போயே ஆக வேண்டும் எனும் நிலையில் ஸ்டாலினை ரஜினி அழைத்துத்தான் ஆக வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடிப்படையில் ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் செட் ஆகவே ஆவதில்லை. ’ஆன்மீக அரசியல்’ எனும் கான்செப்டில் இருவரும் கருத்தியல் ரீதியில் மோதவே செய்துவிட்டார்கள். 

இது ஒரு புறமிருக்க ஆகாத ஸ்டாலினின் அண்ணன் அழகிரியோ ரஜினிக்கு மிக நெருக்கம். சமீபத்தில் கூட அவரது பிறந்தநாளுக்கு மிக எழுச்சியான ஒரு வாழ்த்தை ரஜினி கூற, ‘என்ன என் குடும்பத்துக்குள்ளே அரசியல் பண்றாரா, அழகிரியை எனக்கெதிரா தூண்டி விடுறாரா?’ என்று கடுப்பானார் ஸ்டாலின். அழகிரியை இந்த வைபவத்துக்கு அழைக்காமல் புறக்கணிக்க முடியாது ரஜினியால். அழகிரியை அழைத்தால் ஸ்டாலின் கடுப்பாவார். ஸ்டாலினை தாஜா செய்ய நினைக்கும் மாப்பிள்ளை விசாகன் குடும்பம் ரஜினியிடம் ‘ஏனுங்க இப்படி பண்றீங்க?’ என்பார்கள். 

இந்த குழப்பங்களெல்லாம் வெறுமனே கல்யாணத்தோடு ஒரு நாள் கூத்தாக முடிந்துவிட போவதில்லை. காலத்துக்கும் தொடரும். அதுவும் ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் நிச்சயம் ஸ்டாலினுக்கு மிக மிக எதிர் திசையில்தான் செயல்படுவார், செயல்பட்டாக வேண்டும். அப்போது இந்த குடும்ப உறவுச்சிக்கல் இன்னும் அதிகமாகும். விசாகன் வீட்டில் சம்பந்தம் செய்து கை நனைத்தால் இவ்வளவு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரிந்தும் கூட இந்த திருமணத்துக்கு ரஜினி சம்மதித்திருப்பது, தன் பாசமகள் செளந்துவிற்காகத்தான்.