மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.மேலும் கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இணைந்து போராட்டங்களையும் நடத்தியது.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கேரளா சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.கூட்டம் தொடங்கியதும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனை சட்டசபையில் அங்கம் வகிக்கும் ஒரே பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ராஜகோபால் எதிர்த்தார்.

அதேநேரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து தீர்மானம் தொடர்பான விவாதம் நடந்தது.

விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.