இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரஜினியின் முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பு திமுகவை தோற்கடிக்கத்தான். அதற்காகதான் ரஜினி, கமல் போன்றவர்களை அரசியல் கட்சிகள் தொடங்க வைக்கிறார்கள் என்று மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அவருடைய வாக்குகள் பாஜகவுக்கு சென்றால் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்தார்கள்.


உண்மையில் திராவிட அரசியலின் மோசமான நிலைமையை மக்கள் மனதில் ரஜினி பதிய வைத்துவிட்டார். எனவே, ரஜினியின் கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவை நாங்கள் தோற்கடிப்போம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ரஜினி ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம். திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கிராம சபை என்பதே கட்சி சார்பற்றதுதான். அங்கு எதற்காக திமுக அரசியல் செய்ய வேண்டும். கிராமசபை, கூட்டுறவு சங்கங்கள் கட்சி சார்பற்று இருக்க வேண்டும். திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை ஜனநாயக அமைப்புகளை சிதைக்கும்  வேலை” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.