Special Story about Thirumavalavan and Stalin fight

திருமாவளவனுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான நட்புறவு மீண்டும் கடும் வ்வ்வ்விரிசலை கண்டுவருகிறது. இதை துல்லியமாக கவனித்து வரும் அ.தி.மு.க. அணி செமஹேப்பி! கூடவே வைகோவுக்கு ஃபுல் மகிழ்ச்சி.
நெடுங்காலமாக தி.மு.க. கூட்டணியிலேயே இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விழாக்களில் உரிய மரியாதையில்லை, தேர்தலில் உரிய தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று ஆயிரம் குறைகள் இருந்தாலும் கருணாநிதியுடனான திருமாவின் புரிதல் விடுதலை சிறுத்தைகளை அந்த அணியில் ஒட்டியிருக்க வைத்தது. 

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. அணியிலிருந்து வெளியேறிய வி.சி. கட்சி வைகோவின் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. பெரும் தோல்வியை கண்டது. அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியிலேயே நீடித்து தொகுதி பங்கீடு கண்டது. ஆனால் அந்த தேர்தல் ரத்தானதன் பின் மக்கள் நல கூட்டணியும் உடைந்து சிதறியது. 

திராவிட இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதை வேறு வழியில்லாமல் ஒரு சித்தாந்தமாகவே வைத்திருக்கும் திருமா மீண்டும் தி.மு.க.வை நோக்கி பார்வையை திருப்பினார். ஆனால் இந்த சூழலில் கருணாநிதி இயலாமையிலிருப்பதும், ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக இருப்பதும் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிய சங்கோஜத்தை கொடுத்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் ஸ்டாலினை நோக்கி நட்பு தூது புறாவை பறக்கவிட்டார் திருமா. 

கூட்டணியிலிருக்கும் போதே ஸ்டாலினுக்கும், திருமாவுக்கும் பெரிதாக ஒத்துப் போகாது. இந்த விஷயம் பெரியளவில் எப்போதுமே விமர்சிக்கப்படும் ஒன்றுதான். இப்படியாப்பட்ட சூழலில்தான் அதுவும் கருணாநிதியின் இருப்பு தி.மு.க.வில் இல்லாத சூழலில் மெதுவாக வந்திணைந்தார் திருமா. ஸ்டாலின் தரப்பில் ஆத்மார்த்தமான வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள். அவரை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வுக்கு எதிராக முடிந்தளவுக்கு படை திரட்ட வேண்டும் என்பதே இலக்கு. ஆகையால் திருமாவையும் வரவேற்றார். 

ஆனால் மீண்டும் தி.மு.க.வை நோக்கிய திருமாவின் இந்த யூ டர்ன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தளகர்த்தர்களுக்கு பிடிக்கவில்லை. வன்னியரசு உள்ளிட்ட சிலர் திருமாவிடம் இதை வெளிப்படையாகவே பகிர்ந்தனர். ஆனால் ‘நாம் நடத்துவது இயக்கமல்ல, கட்சி. தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சில நெளிவு சுளிவுகள், அணுசரணைகள் அவசியம்.’ என்று சமாதானப்படுத்திவிட்டு ஸ்டாலினின் நட்புக்கு அழுத்தம் கொடுக்க துவங்கினார். அதேவேளையில் தி.மு.க.வின் தளகர்த்தர்களுக்கும் திருமாவின் மீள் வருகையில் விருப்பமில்லை. 

இந்நிலையில்தான் வந்தது கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு. திருமாவின் பெயர் அழைப்பிதழில் இல்லாதது அவருக்கும், அவரது இயக்கத்தினருக்கும் மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும் கடந்து சென்றார்கள் அந்த பிரச்னையை. 
இந்நிலையில்தான் தி.மு.க.வினரே தி.மு.க.வுடனான திருமாவின் நட்புக்கு சமூக வலைதளங்கள் வழியே ஆப்பு வைக்க துவங்கினர். ‘திருமாவை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் அவசியம் நமக்கில்லை தளபதி!’ என்று டேரிங்காகவே கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்களின் ஆவேச பதிவுகள் வி.சி.க்களுக்கு ஆதங்கத்தை தந்தாலும் திருமாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தனர். 

திருமாவோ ‘இந்த பதிவுகளுக்கு ஸ்டாலினின் ரியாக்ஷன் என்னவென்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.’ என்றிருந்தார். ஆனால் ஸ்டாலினிடமிருந்து எந்த கண்டிப்பும் வரவில்லை. இது திருமாவை வெகுவாக பாதித்தது. 

இந்த நிலையில்தான் கடந்த 10_ம் தேதியன்று சென்னையிலுள்ள வி.சி.க. தலைமை அலுவலகத்தில் திருமுருகன் காந்தி ஆகியோருக்கு ஆதரவான போராட்டம் நடந்தது. இதில் பேசிய திருமாவளவன் “விடுதலை சிறுத்தைகள் இயக்க முன்னணி சகோதரர்களை 1997_ல் தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அதனால்தான் நாம் தேர்தல் அரசியலுக்கு வந்தோம். 2009_ல் ஈழப்போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும் வி.சி. தோழர்கள் பலரை தி.மு.க. அரசு கைது செய்தது.” என்று அதிர அதிர திராவிட முன்னேற்ற கழகத்தை குறிவைத்து தாக்கி பேசினார். 

திருமாவின் இந்த ஆவேசம் முழுக்க முழுக்க ஸ்டாலினுக்கு எதிரானது என்கிறார்கள் வி.சி.கட்சியின் முன்வரிசை நிர்வாகிகள். அதேபோல், சமூக வலைதளங்களில் தங்களை கிண்டலடிக்கும், தங்களை வெறுத்து கருத்துக்களை உமிழும் தி.மு.க.வினருக்கு ஆவேசமாக பதில் தந்து கருத்துக்களை இடவும் திருமா கட்டளையிட்டுவிட்டாராம். அடுத்த நொடியே பற்றி எரியும் பதிவுகளை துவக்கிவிட்டனர் வன்னியரசு தலைமையிலானவர்கள்.

வேறு வழியின்றி கூட்டணியை நாடி வந்திருப்பதால் தாங்கள் அடக்குவதற்கெல்லாம் விடுதலை சிறுத்தைகள் அடங்கி நிற்பார்கள் என்று ஸ்டாலின் நினைத்ததாகவும் ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் திருமா அத்துமீறி துள்ளி எழுந்துள்ளதாகவும் வி.சி.க்கள் கொக்கரிக்கிறார்கள். இது உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஷாக் என்றும் அழுத்திச் சொல்கிறார்கள். 

ஆக ஸ்டாலின் மற்றும் திருமா இருவருக்கும் இடையில் விழுந்துள்ள இந்த பள்ளத்தாக்கு பிளவால் அ.தி.மு.க.வும், வைகோவும் உள்ளபடியே பூரிப்பில் உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பெரும் தலித் வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா இல்லாத நிலையில் இதில் பெரும் பகுதி திருமா வழியே தி.மு.க. கூட்டணிக்கு போய்விடுமோ என்பது அ.தி.மு.க.வின் அத்தனை அணிகளின் அச்சமாக இருந்தது. ஆனால் இந்த பிளவின் மூலம் அவர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர். 

கூடவே, மக்கள் நல கூட்டணி உடைந்தபின் பிரிந்து சென்ற திருமா தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில் வைகோவுக்கு கிஞ்சிற்றும் விருப்பமில்லை. இப்போது இந்த பிளவு அவரையும் சொல்ல வைத்துள்ள வார்த்தை ஒரே வார்த்தை என்ன தெரியுமா?...
”மகிழ்ச்சி!”