Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் சித்திரை வெயிலை சமாளிக்க சிறப்புத் திட்டம்... மாஸ் காட்டும் ராமதாஸ்..!

சித்திரை பிறந்து விட்ட நிலையில், வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து விட்டது. வீடுகளை விட்டு வெளியில் வந்து நடமாடவே முடியாது என்ற நிலை ஒருபுறம் இருக்க, வீடுகளுக்கு உள்ளேயேயும் இருக்க முடியாது என்ற அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.

Special plan to deal with the sun... ramadoss
Author
Tamil Nadu, First Published Apr 15, 2021, 4:21 PM IST

தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகளையும், சதுப்பு நிலங்களையும் இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும்  என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சித்திரை பிறந்து விட்ட நிலையில், வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து விட்டது. வீடுகளை விட்டு வெளியில் வந்து நடமாடவே முடியாது என்ற நிலை ஒருபுறம் இருக்க, வீடுகளுக்கு உள்ளேயேயும் இருக்க முடியாது என்ற அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் கடுமையில்  இருந்து மக்களைக் காப்பதற்கான பசுமை செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Special plan to deal with the sun... ramadoss

வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாடு இரு வழிகளில் பாதிக்கப்படுகிறது. முதலாவதாக காலநிலை மாற்றத்தின் பயனாக பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது 1.5 டிகிரி என்ற அளவுக்கு  உயரும். அதனால், வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். இரண்டாவதாக, வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் கூட, மரங்களின் எண்ணிக்கையும், பசுமைப் போர்வையின் பரப்பும் அதிகமாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். ஆனால், ஒப்பீட்டளவில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மரங்கள் மற்றும் பசுமைப் பரப்பின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இனி வரும் ஆண்டுகளில் புவி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால், கோடைகாலத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படும். இந்தியாவில் 75% அளவு தொழிலாளர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழலில் பணியாற்றுவதால், உள்நாட்டு உற்பத்தியில் 4.5% வரை, அதாவது ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும். ஒருபுறம் வெப்பநிலையையும், மறுபுறம் வெப்பத்தின் கடுமையையும் குறைக்க முடியாதா? என்பது  தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் வினாவாக உள்ளது. அரசும், மக்களும் மனம் வைத்தால் வெப்பநிலை, வெப்பத்தின் கடுமை ஆகிய இரண்டையும் கண்டிப்பாக குறைக்க முடியும். இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் வெப்பத்தை சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தும் இயற்கை சார்ந்த தீர்வுகளை (Nature-based solutions - NBS) முழு வேகத்தில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Special plan to deal with the sun... ramadoss

மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 விழுக்காட்டைக் குறைக்க முடியும். எனவே, அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்க, நகரங்களில் பெருமளவு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். சுற்றியுள்ள பகுதிகளிலும் காடுகளையும் பசுமைப் பகுதிகளையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகருக்கும் ஒரு பசுமை செயல்திட்டத்தை  (Green City Action Plan) உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் வெப்பத்தை விரட்டியடிக்க முடியும். தமிழ்நாட்டில் வேலூர், சேலம், திருத்தணி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள  மலைப்பகுதிகளையும், சமுதாயக் காடுகளையும் பசுமைப் பகுதிகளாக மாற்றி, அவற்றில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். அதன் மூலம், மலையோர நகரங்களின் வெப்பத்தை குறைக்க முடியும். 

சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களில் காடுகளை வளர்க்க முடியாது என்றாலும் கூட, அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படும் போது ஒதுக்கப்படும் திறந்தவெளி பரப்புக்கான நிலங்களில் மியாவாக்கி முறையில் நகர்ப்புற அடர்வனங்களை உருவாக்கலாம். சிங்கப்பூரில் இருப்பதைப் போன்ற சாலைகளின்  மையங்களிலும், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் பசுமைப் போர்வையை ஏற்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. பசுமைப் பரப்பை உருவாக்குவது ஒருபுறமிருக்க, ஏற்கனவே உருவாக்கப்பட்ட பசுமைப் போர்வையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகளையும்,  சதுப்பு நிலங்களையும் இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும். அதுமட்டுமின்றி,  நகரப்பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாத்து பசுமைப் போர்வையை விரிவுபடுத்தவும் மரங்கள் ஆணையத்தை உரிய அதிகாரங்களுடன் உருவாக்க வேண்டும்.

வெப்பநிலையையும், வெப்பத்தின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவது அரசின் கடமை மட்டுமே அல்ல... பொறுப்புள்ள குடிமக்களாகிய நமக்கும் அதற்கான கடமை உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விதைப் பந்துகளை தயாரித்து மனித நடமாட்டம் இல்லாத, மண் வளம் மிக்க பகுதிகளில் வீச வேண்டும். அதுமட்டுமின்றி, நகர்ப்புற வீடுகள், கட்டடங்களின் மேற்கூறைகளை வெள்ளை வண்ணத்திலும், சூரிய ஆற்றலை ஈர்க்காத முறையிலும் அமைப்பதன் மூலம் வீடுகளுக்குள் வெப்பத்தை கணிசமாக குறைக்க முடியும். 

Special plan to deal with the sun... ramadoss

வெப்பநிலையை குறைப்பதும், வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் ஒரே நாளில் சாத்தியாகும் விஷயங்கள் அல்ல. ஆனால், அனைத்து சாதனைப் பயணங்களும் நாம் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் தொடங்குகின்றன. ஆகவே, அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம். நடப்பு பத்தாண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமை இல்லாமல் இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை  ஏற்படுத்துவதற்கான பசுமை நடவடிக்கைகளை இந்த நிமிடத்திலிருந்து நாம் அனைவரும் தொடங்குவோம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios