பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசியது ஆளும் அதிமுக அரசை கோபம் கொள்ளச் செய்தது. இந்நிலையில் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீசாகும்போது அரசு பிரச்னையை கிளப்பலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், ஆளும் தரப்பை சமாதானப்படுத்த விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போது, ‘பிகில் பட வெளியீட்டு விழாவில் நானும் இருந்தேன். விஜய் அங்கு பேசியது அரசியல் பேச்சாகத் தெரியவில்லை. நான் 1980 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை படங்களை எடுத்துக் கொண்டு வருகிறேன். சமூகம் சார்ந்த விஷயங்களை தான் அவர் சொல்கிறார். அதை ஒருசிலர் அரசியலாக நினைத்துக் கொள்கிறார்கள்.  விஜய் நல்லா இருக்க வேண்டும் என்றால் அவரை சுற்றி இருப்பவர்கள் நல்லா இருக்கணும் . ஒரு அப்பாவை இங்க வைக்கணும், அம்மாவை அங்கா வைக்கணும், அக்கவுண்டண்டை எங்கே வைக்கணும்.  ஒரு ரசிகனை எங்கே வைக்கணுமோ அங்கே வைக்கணும் அப்போ அந்த நடிகன் நல்லா இருப்பான்.

 

இதை வைத்து தான் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே வைக்க வேண்டும் என அவர் மேடையில் பேசினார்.  இது ரசிகர்களுக்கான அறிவுரைகூட கிடையாது. அவர் பின்பற்றுவதை அவர் சொல்கிறார்.  தமிழ்நாட்டில் பிறந்த ஒருவன், தமிழ்நாட்டில் பேனர் விழுந்து இறந்த பெண்ணை பற்றி பேசக்கூடாதா? அப்படி பேசினால் அது அரசியலா?  விஜய்க்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததை பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். விஜய் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டில் நடப்பதற்கெல்லாம் உடனே அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அல்ல. 

அவர் ஒரு சினிமா நடிகர். வருஷத்துக்கு ஒருதடவை மேடை ஏறுகிறார். அந்த வருடம் நடந்த நிகழ்வுகளை மேடையில் சொல்கிறார். சினிமா வேறு அரசியல் வேறு.  முதலமைச்சரை சந்திப்பாரா? என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.  இப்போது இருக்கிற அரசு மீது எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கிறது. பிகில் படத்திற்கு அவர்கள் பிரச்னை செய்ய மாட்டார்கள். சினிமா வேற அரசியல் வேறனு அவங்களுக்கும் தெரியும். ஆகையால், தேவையில்லாமல் இந்த அரசாங்கத்தை சீண்ட வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தப்பேச்சு பிகில் படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால் அதிமுக அரசாங்கத்தை சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள்.