சசிகலாவுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள், ஆம்புலன்ஸ் மூலமாக சிறைக்குள் அனுப்பப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சசிகலா ஜெயிலில் அடைக்கப்பட்டு முதல் தற்போது வரை எந்தெந்த வகையில் சிறை விதிகளை மீறி அவர் சலுகைகளை பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறையின், புற வாசல் பாதுகாப்புக்கு, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு ஏட்டு கஜராஜ் விதிமுறைகளை மீறி
சசிகலாவை சந்திக்க வரும் தொழிலதிபர்கள், தமிழக அரசியல் பிரமுகர்கள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் என பலரிடமும், அனுமதி ரசீது பெறாமலும், வருகை பதிவேட்டில், பெயர், விலாசத்தை குறிப்பிடாமலும், நேரடியாக முறைகேடாக அழைத்து செல்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சசிகலாவின் சகோதரி மகனான தினகரன், இளவரசி மகன் விவேக், கட்சியின் கர்நாடக பிரிவு செயலாளர் புகழேந்தி, வக்கீல் செந்தில் ஆகியோர் தினமும் இரவு 7 மணிக்கு பின், சிறைப்பகுதிக்கு வந்து சசிகலாவை சந்தித்து  செல்வதாக கூறப்படுகிறது.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, சமையல் செய்ய தேவையான பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஓசூர் எம்.எல்.ஏ., வீட்டில், சமைக்கப்பட்ட சிறப்பு உணவு உட்பட பல பொருட்களை, சோதனை செய்யாமல், கே.ஏ., - 42 ஜி 919 மற்றும் கே.ஏ., - 42 ஜி 799 ஆகிய இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக, சிறைக்குள் கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவை சந்திக்க தமிழகத்திலிருந்து யார் வந்தாலும், கஜராஜ் மூலமாக தான் சிறைக்குள் செல்கின்றனர். இதற்காக கஜராஜ், லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளார்.

தினகரன் மூலம், பன்னரகட்டா மெயின் ரோட்டில் 30 சதுர அடிக்கு 40 சதுர அடியில் ஒரு மனையும் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது லஞ்ச குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சற்று அடக்கி வாசிப்பதாகவும், மீண்டும் சிறிது நாளில் பழைய நிலைமை திரும்பும் என்றும் கஜராஜ் கூறியுள்ளதாக தெரிகிறது.