Special Article about Edapadi K Palanisami

ஜெயலலிதா மறைந்துவிட்டதால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகிறார்தான். ஆனாலும் சில யதார்த்தங்களை குறிப்பிட்டுதான் ஆகவேண்டும். காலில் விழுதல் எனும் கான்செப்டை எடுத்து வைத்து பேச வேண்டியிருந்தால் அது அ.தி.மு.க.வில் சர்வாதிகாரத்தின் மிச்சமாகவும் அதே நேரத்தில் விமர்சகர்கள் மத்தியில் நையாண்டித்தனத்தின் உச்சமாகவும் பார்க்கப்பட்டது. 

ஜெயலலிதாவின் கால்கள் கண்ணுக்கு தெரியாத பட்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் காரின் இடது முன்புற டயரை தொட்டு வணங்கியவர்தான் இன்று ‘நீதி கேட்கும்’ ஓ.பன்னீர்செல்வம். ஆகாய மார்க்கமாய் ஹெலிகாப்டரில் அம்மா பறந்தபோது சர்வ சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து தொழுதவர்கள்தான் நமது மாண்புமிகுக்கள். 

ஆனால் அப்பேற்பட்ட ஜெயலலிதாவின் இறப்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ‘அவரது கால்கள் எங்கே?’ என்று ஒரு கேள்வி எழுந்தது நினைவிருக்கலாம். அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த ஆண் ஆளுமைகளையும் தனது காலில் விழவைத்த ஜெயலலிதா பூத உடலாக இருந்தபோது அவரது உடலில் கால் இருந்ததா என்று டவுட் கிளம்பும் சூழல் உருவானதுதான் விதி!

ஜெ.,வின் மறைவிற்கு பின்னாவது அந்த கட்சியில் சுயமரியாதை மாண்பு கிஞ்சிற்றேனும் மதிக்கப்படுமா? எனும் சூழல் கிளம்பியபோது மீண்டும் சசியின் பாதங்களை நோக்கி பாய ஆரம்பித்தனர் நிர்வாகிகள். அவர் பொதுச்செயலாளர் அவதாரம் எடுத்த நொடியில், தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றும் கூட பாராமல் சட்டென்று அவரது காலில் விழுந்து தன் இருப்பை வலுப்படுத்திக் கொண்டவரும் இதே புரட்சிகர பன்னீர்செல்வம்தான். 

இப்போது அம்மா, சின்னம்மா என்று யாரும் இல்லாத நிலையில் முதுகு வளைய அவசியமின்றி நிமிர்ந்து நிற்கிறார்கள் அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள். ஆனால் இந்த நேரத்தில் தங்கள் காலில் யாராவது விழுவார்களா? என்று அவர்கள் சர்வாதிகாரத்தின் ருசியை சுவைத்துவிட துடிக்கிறார்களோ ? என்று எண்ண தோண்றுகிறது. அடிப்படையில்லாமல் இந்த சந்தேகம் எழுந்துவிடவில்லை. 

சமீபத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த கழக நிகழ்வில் செங்கோட்டையன், நிலோபர் கபில், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகிய அமைச்சர்கள் உடனிருக்க சில பயனாளிகளுக்கு உதவி வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது ஒரு பெண் அவரது காலில் விழுந்து வணங்குகிறார். இதை மற்ற அமைச்சர்களும் கவனித்தபடி நிற்கின்றனர். 

சுயமரியாதை பற்றி தேசத்துக்கே வகுப்பெடுக்கும் தமிழ் மண்ணில் இதெல்லாம் இன்னும் தொடர வேண்டிய அவசியமில்லை. தன்னால்தான் அ.தி.மு.க. துடிப்போடு இருக்கிறது, ராணுவ கட்டுப்பாட்டுடன் கழகத்தை தான் நடத்துவதாக உலகுக்கு காட்டுவதற்காக கூட ஜெயலலிதா இந்த காலில் விழும் அவலத்தை பொறுத்திருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ எந்த வகையிலும் ஜெ.,வுக்கு நிகரில்லை. மேலும், இல்லார்க்கு உதவுவதுதான் ஆள்பவனின் கடமை. வாங்கும் சம்பளத்துக்கு கடமை செய்பவருக்கு எதற்காக இந்த ராஜமரியாதையெல்லாம்? 

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த சீனில் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரான மாஜி எம்.எல்.ஏ. சின்னசாமியும் இருக்கிறார். கடந்த ஆண்டில் சேலத்தில் நிகழ்ந்த விழா ஒன்றில் உதவி வாங்க வந்த முதியவர் தடுமாறி நிற்க அவரை தலையில் தட்டி கவனிக்க வைத்து, வீடியோவில் சிக்கிய அதே சின்ன்சாமிதான். இந்த நிகழ்விலும் கூட நிற்கிறார். அ.தி.மு.க.வில் அதிகார அகம்பாவங்கள் கொப்பளிக்கும் இடங்களிளெல்லாம் இந்த சின்னசாமி நிற்பார் போலிருக்கிறது. 

சரி விஷயத்துக்கு வருவோம்!..தன் கட்சியினரையோ அல்லது பொது மக்களையோ காலில் விழ அனுமதிக்க வேண்டிய அவசியம் தனக்கு எந்த சூழலிலும் இல்லை என்பதை எடப்பாடியார் புரிந்து கொள்வது அவசியம். முதல்வராக இருக்கும் அவர் ‘யாரும் தப்பித்தவறி கூட என் காலில் விழவே கூடாது.” என்று உத்தரவை போட்டுவிட்டால் அப்படியொன்று நிகழ்ந்துவிடாதபடி காவல்துறையும், கழக நிர்வாகிகளும் கவனித்துக் கொள்வார்கள். 

அதைவிடுத்து அதிகாரம் தன் கூடவே அழைத்து வந்து கொடுக்கும் இந்த மாதிரியான மனிதநேயமற்ற மரியாதைகளை அவர் தொடர்ந்து சுவைக்க நினைத்தால் அது அவருக்கு வீண் விமர்சன சிக்கலைத்தான் கொண்டு வந்து கொடுக்கும். 

எடப்பாடியார் மிக தெளிவான மனிதர்! இனி இதையெல்லாம் தவிர்ப்பார் என்று நம்புவோமாக.