நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சாதிய ரீதியில் தன்னை திமுகவினர் அவமதித்ததாக, சபாநாயகர் தனபால் கூறிய குற்றச்சாட்டு குறித்து, அதிமுகவினர் பேசாதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகரின் இருக்கை மற்றும் மைக்கை உடைத்தனர். வெளியே செல்ல முயன்ற சபாநாயகரின் கையை பிடித்து இழுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுகவினர் அனைவரையும் வெளியேற்றும் படி தனபால் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான முக ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.
திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து சபாநாயகர் பேசுகையில், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்பதால் தன்னை திமுகவினர் மதிக்காமல் அவமானபடுத்தினர் என கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சாதிய ரீதியில் தன்னை திமுகவினர் அவமதித்ததாக, சபாநாயகர் தனபால் கூறிய குற்றச்சாட்டு குறித்து, அதிமுகவினர் பேசாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் தனபாலின் குற்றச்சாட்டு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
