ஒவ்வொரு நிமிடமும் முறைகேடு செய்துவரும் ஊழல்மணியின் கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அமைச்சர் வேலுமணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடாமுத்தூர் தொகுதியில் தேவராயபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘’தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு இந்த கோவையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அக்கிரமங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவி வைத்துக்கொண்டிருக்கிறார். நான் வகித்த பதவி தான். நான் துணை முதலமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் என் கையில் வைத்திருந்தேன். “உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன்”என்று பெயர் எடுத்தவன், இந்த அடியேன் ஸ்டாலின். ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். அந்தளவுக்கு அந்தத் துறையை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்; கேவலப்படுத்தியிருக்கிறார்கள். 

அவரை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வதற்குப் பதிலாக ஊழலாட்சித் துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஊழல்களை – அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத்தான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று, அதற்கானப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என இங்குள்ள அமைச்சர் செயல்படுகிறார்.அதையெல்லாம் எதிர்த்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் கார்த்திக், சி.ஆர்.ராமச்சந்திரன், சேனாபதி, பையா கிருஷ்ணன் ஆகியோர் கழகத்தினரின் ஒத்துழைப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் கூட, சில போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது, அதற்கான அனுமதியை மறுத்தார்கள். அனுமதி தர மறுக்கிறார்கள் என்று எனக்கு விடிய விடிய தொலைப்பேசி அழைப்பு வந்துகொண்டிருந்தது. கைது படலம் எல்லாம் நடந்தது. நம்முடைய தோழர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தார்கள். உடனே எனக்குச் செய்தி கிடைத்தது. பத்து நிமிடத்தில் விடுகிறார்களா என்று கேளுங்கள். இல்லையென்றால், விடியற்காலையில் விமானத்தைப் பிடித்து நான் உங்களோடு போராட வருகிறேன் என்று தொலைப்பேசியில் சொன்னேன். பேசிய பத்தாவது நிமிடத்தில், நம் தோழர்களையெல்லாம் வெளியே விட்டு விட்டார்கள். அந்த பயம் இருக்க வேண்டும்.

அவ்வளவு அக்கிரமங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக எல்லா மாவட்டங்களையும் விட, அதிகமாக அக்கிரமம், அநியாயம், ஊழல் இந்தக் கோவை மாவட்டத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இன்னும் நான்கு மாதங்கள் தான், அவர்கள் ‘சாப்டர் கிளோஸ்‘. அவர்களுடைய ஊழல்களை மக்களிடத்தில் நாங்கள் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லை என்றால் உங்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?

இப்போது வேலுமணி தொலைக்காட்சியில் இந்தக் கூட்டத்தின் நேரலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். உங்களது கைகளை உயர்த்திக் காட்டுங்கள், அவர் தெரிந்து கொள்ளட்டும். சீப்பை ஒளித்து வைத்துவிடுவதால் திருமணம் நின்றுவிடாது. எங்களையெல்லாம் கைது செய்து அடைத்து வைத்துவிட்டால் மக்களுடைய உணர்வைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அதனுடைய எழுச்சிதான், இந்த எழுச்சி. கிராம சபை கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள்.

ஊழல் புகார்களை எல்லாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேட்டிருக்கிறார். அமைச்சர் வேலுமணி அவர்களே அதை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடியா. நீங்கள் முதலில் சொல்லுங்கள். நான் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலைவிட்டு ஒதுங்குங்கள். அது ஒரு பக்கம். அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டு இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சட்டத்தின் முன்னால் நிற்க வைத்து அதற்குரிய தண்டனை வாங்கித் தரும் பொறுப்பைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். இது அரசுப் பணம்; மக்கள் தருகிற வரிப்பணம்’’ என அவர் தெரிவித்தார்.