அதிமுக எம்எல்ஏக்களை அடைத்து வைத்து கொத்தடிமைகளாக நடுத்துவதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எம்எல்ஏ புகார் கொடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சசிகலா தரப்பு மீது காவல் நிலையத்துக்கே சென்று புகார் அளித்துள்ளார்.

அதாவது சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அதிமுக எம்எல்ஏக்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் முன்னாள் அமைச்சரான தன்னையே அதிக டார்ச்சர் செய்ததாகவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பின் சண்முகநாதன் தெரிவித்தார்.

அதிமுக தலைமைக்கு எதிராக புகார் கொடுக்க வந்த தன்னிடமிருந்து கமிஷனர் புகாரை வாங்கவில்லை என்றும் இணை ஆணையர் ஷங்கர் மட்டுமே புகாரை பெற்று கொண்டதாகவும் சண்முகநாதன் தெரிவித்தார்.

மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு தரப்பில் அருமையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு ஏன் அவர்களை அடைத்து வைத்து துன்புறுத்த வேண்டும், தான் மட்டுமே தப்பி வந்ததாகவும் மற்ற எம்எல்ஏக்கள் மனக்குமுறலோடு ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள். எனவே அவர்களை மீட்க வேண்டும் என எஸ்.பி சண்முகநாதன் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.