சென்னை கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெறும் ரகசிய நிகழ்வுகள் கூட உடனுக்குடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு செல்வது எடப்பாடி பழனிசாமியை கொதிக்க வைத்துள்ளது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டே கோட்டையில் திமுக தரப்புக்கு உளவாளிகள் உண்டு. அரசியல், அரசு தொடர்பாக எம்ஜிஆர் எடுக்கும் முடிவுகள் உடனுக்குடன் கலைஞர் டேபிளுக்கு வந்துவிடும். அரசின் மிக முக்கியமான கோப்புகளின் ஒரிஜினல் வெர்சனை கூட முதலமைச்சருக்கு முன்னரே கலைஞர் பார்த்துவிடுவார் என்றும் பேச்சு அடிபட்டதுண்டு. அந்த அளவிற்கு கோட்டையில் அதிகாரிகள் மத்தியில் கலைஞர் செல்வாக்கோடு திகழ்ந்தார். இதே பாணியில் தான் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதும் கோட்டை தகவல்கள் கலைஞர் காதுகளுக்கு எளிதாக வந்துவிடும்.

அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடுவது, பேட்டி கொடுப்பது என்று அரசியல் களத்தை சூடாகவே வைத்திருப்பார் கலைஞர். இதனால் சில சமயங்களில் மிக முக்கியமான முடிவுகளை கோட்டையில் எடுப்பதை தவிர்த்து போயஸ் கார்டனில் இருந்து எடுப்பதை ஜெயலலிதா வழக்கமாக்கிக் கொண்டார் என்றும் கூறுவார்கள். இந்த நிலையில் இதே பாணியில் சென்னை தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் மிக முக்கிய முடிவுகளை உடனுக்குடன் மு.க.ஸ்டாலின் தரப்பு தெரிந்து கொள்வதாக கூறுகிறார்கள். உதாரணத்திற்கு முக்கியமான பிரச்சனைகளின் போது அரசு எடுக்கப்போகும் முடிவுகள் ஸ்டாலினுக்கு அப்படியே அச்சு பிசகாமல் தெரிந்து விடுவதாக சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கும் சமயத்திலும், நிவாரணம் அறிவிக்கும் சமயத்திலும் மு.க.ஸ்டாலின் காலையில் ஒரு அறிக்கை வெளியிட அந்த அறிக்கையின் அம்சங்கள் அப்படியே அரசு உத்தரவுகளாக மாலையில் வெளியாகின. இதற்கு காரணம் அரசு இப்படி ஒரு முடிவை எடுக்கப்போகிறது என்று கோட்டையில் கசியும் தகவல்களை தனது கோரிக்கையாக ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் அந்த உத்தரவை பிறப்பித்ததும் தனது கோரிக்கையை ஏற்று தான் இந்த உத்தரவு, நான் என்ன சொன்னேனோ அதைத்தான் எடப்பாடி செய்கிறார் என்று ஸ்டாலினும், திமுக நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பிபிக்கு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்த விவகாரமும் ஸ்டாலின் காதுகளுக்கு முன்கூட்டியே சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். அதாவது எஸ்பிபி மறைவை தொடர்ந்து அவருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் எஸ்பிபி உடலுக்குஅஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கு இருக்கும் ஆபத்தையும் உணராமல் மக்கள் கூட்டம் திரண்டதை யாராலும் நம்ப முடியவில்லை. இந்த நிலையில் தான் எஸ்பிபிக்கு அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை சமூக வலைதளங்களில் பலரும் தீவிரமாக பேச ஆரம்பித்தனர். அப்போது தான் எஸ்பிபிக்கு அரசு மரியாதை செலுத்துவது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். ஆனால் அதற்குள் இந்த தகவல் கசிந்து மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் எஸ்பிபிக்கு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சரும், எஸ்பிபி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன என்றால் காலையில் எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அந்த அறிக்கையில் எஸ்பிபிக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனால் கராத்தே தியாகராஜன் விடுத்த இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆன உடன் அரசு அந்த முடிவை எடுக்க தயாரானது. இதனை தெரிந்து கொண்டே ஸ்டாலின் அவசர அவசரமாக மற்றொரு அறிக்கை வெளியிட்டார் என்கிறார்கள். இதனை அறிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொதித்ததாக சொல்கிறார்கள். கோட்டையில் நாம் எடுக்கும் முடிவுகளை எல்லாம் முன்கூட்டியே ஸ்டாலின் அறிக்கையாக வெளியிடுவது எப்படி? என்று அவர் கொந்தளித்ததாக சொல்கிறார்கள். இது இன்று நேற்றாக இருந்தால் பரவாயில்லை எம்ஜிஆர் காலம் தொட்டே இது தானே திமுக தலைமையின் வேலை என்று கூறிச்சிரிக்கிறது கோட்டை வட்டாரம்.