தென் சென்னை பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியில் ஒரு வழியாக வி.பி. கலைராஜனை வீழ்த்தியுள்ளார் ஜெ அன்பழகன்.

சென்னையை பொறுத்தவரை வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சென்னைகளையும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வருவார்கள். 

உதாரணத்திற்கு தென் சென்னையை நீண்ட நாட்களாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கலைராஜன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சசிகலா தயவால் எம்எல்ஏவான கலைராஜன் தன்னுடைய பிரத்யேக டெக்னிக் மூலமாக தென் சென்னையில் கெத்தாக வலம் வந்தவர். ரியல் எஸ்டேட் தொடங்கி பாத்ரூம் காண்டிராக்ட் வரை அனைத்திற்கு கலைராஜனைத்தான் அணுக வேண்டும். 

இந்த விவகாரத்தில் கலைராஜன் மீது புகார்கள் சென்ற நிலையில் அவரை நேரடியாக அழைத்து கண்டித்த ஜெயலலிதா கட்சிப் பதவியை மட்டும் பறிக்கவே இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு தென் சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் கலைராஜன். தியாகராயநகர் தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெ அன்பழகன் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். அவரை மீறி அங்கு வெல்ல முடியாது என்பதால் தான் அன்பழகன் திருவல்லிக்கேணி தொகுதிக்கே சென்றார். 

இந்த நிலையில் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு சசிகலா ஆதரவளாராக மாறிய கலைராஜன் தற்போது திமுகவில் ஐக்கியமானார். எப்படியும் திமுகவில் மாவட்டச் செயலாளர் ஆகிவிடும் கனவில் இருந்த அவரை ஸ்டாலின் நேற்று கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளர் பதவியில் நியமித்தார். இதன் மூலம் தென் சென்னையில் தனது அரசியல் ஆட்டத்தை கலைராஜன் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் என்றே கூறலாம். 

மேலும் தென் சென்னை பகுதியில் இனி அன்பழகன் கெத்தாக வலம் வருவார் என்கிறார்கள். ஏனென்றால் சென்னை மேற்கு மாவட்டத்தை பிரித்து கலைராஜனை ஒரு மாவட்டச் செயலாளர் ஆக்கப்போவதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதால் இனி தென் சென்னை பகுதியில் ஜெ அன்பழகன் தானாம்.