அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பூரண குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றன. அதேபோல் ஜெயலலிதா குணம் பெற வாழ்த்து செய்திகளும் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் அப்போலோ மருத்துவமனை சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

அப்போலோ சென்ற அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.