ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான வேலைகளில் சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருந்து அரசியல் களம் காணப்போவதாகவும் நடிகர் ரஜினி அறிவித்திருந்தார். அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த், முதல் முறையாக இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது இந்த பயணத்தில், பல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும் ஆன்மிக குருக்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

15 நாட்கள் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்கு குகைக் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரிஷிகேஷ் பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  
டேராடூன் சென்றுள்ளார்.

தனது பயணம் குறித்து ரஜினி, தற்போது ஆன்மீகப் பயணம் மட்டுமே வந்துள்ளேன் என்று கூறியிருந்தார். ரஜினி தனது ஆன்மீக பயணத்தை முடித்த பிறகு, அரசியல் கட்சி பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும்படி சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.