மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல முடிவு கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் போர்வைகளை அனுப்ப, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூபாய் 3.30 கோடி மதிப்பிலான போர்வைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்த மாநிலமும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது நமது தமிழக அரசு உதவுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்குத் தற்போது வேண்டிய உதவிகளைச் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 7 ஆண்டு காலம் மட்டுமே செல்லுபடியாகும். அதை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும். நீட் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.