அ.தி.மு.கவில் தனது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்ள சசிகலாவுடன் சமாதானம் செய்து கொள்ளும் முடிவில் ஈ.பி.எஸ் உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.கவில் இருந்து ஓரங்கப்பட்ட பிறகு தினகரன் ஒழிந்துவிடுவார் என்பதே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.ஸ்சின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தனியாக கட்சி துவங்கி காங்கிரசுடன் கூட்டணி பேசும் அளவிற்கு தினகரன் வளர்ந்துவிட்டார். அதே சமயம் அ.தி.மு.கவை பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படி எந்த முன்னேற்றமும் இல்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் ஈ.பி.எஸ்ஸால் கட்சி வளர்ச்சி குறித்து பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது கூட அ.தி.மு.க தொண்டர்களிடம் எழுச்சியை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தான் அ.தி.மு.கவிற்கு தற்போது பெரும் சவாலா உள்ளது. ஏனென்றால் அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் தயாராக இல்லை.

மக்களை கவர்ந்த வகையிலான தலைவர்களும் அ.தி.மு.கவில் இல்லை. அ.தி.மு.க தொண்டர்களும் கூட தங்கள் தலைமையின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றால் அந்த கட்சி தொகுதிப் பங்கீடு முதல் தொகுதி ஒதுக்கீடு வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இதனால் தினகரனுடன் மீண்டும் சமாதானமாக சென்றுவிடுவது நல்லது என்று அ.தி.மு.க 2ம் கட்ட தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். 

ஆனால் தன்னை மிக கடுமையாகவும், கேவலமாகவும் விமர்சித்து வரும் தினகரனுடன் சமரசமாக செல்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் குறித்தும் எடப்பாடி பழானிசாமி கடந்த காலங்களில் மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

இந்த நிலையில் தற்போதைக்கு சமரசம் செய்து கொண்டாலும், எதிர்காலத்தில் தினகரன் தன்னை பழிவாங்குவார் என்று எடப்பாடி கருதுகிறார். எனவே தினகரனை ஒதுக்கி வையுங்கள் என்கிற நிபந்தனையுடன் சசிகலாவுடன் சமரசம் பேசும் முடிவிற்கு எடப்பாடி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக விரைவில் சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க முக்கிய நிர்வாகி சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.