ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதாரத்தை மீட்டுருவாக்குவதற்காக சுயசார்பு இந்தியா என்ற திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அணுசக்தித்துறை, ரியல் எஸ்டேட், சிறு, குறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயம் சார்ந்த பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை என அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விதத்தில், மொத்தம் ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

இந்நிலையில், அந்த அறிவிப்புகளை நாட்டின் கொடூரமான காமெடி என சோனியா காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலை மத்திய அரசு கையாளும் விதம், ஊரடங்கை அமல்படுத்தும் முறை ஆகியவற்றை கடுமையாக சாடிவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று விமர்சித்துவருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, சிவசேனா, இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கு மத்திய அரசிடம் எந்த தீர்வுமே இல்லை என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. லாக்டவுனை நடைமுறைப்படுத்துவதிலும், லாக்டவுனை முடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்தும் மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. லாக்டவுன் காலக்கட்டத்தில் மத்திய அரசு எடுத்த எந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.

நாட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்கும் இந்த வேளையில், ரூ.20 லட்சம் கோடிக்கு சலுகை அறிவிப்புகள் என்று ஒரு பேக்கேஜை வெளியிட்டனர். அதுதான் நாட்டின் கொடூரமான காமெடி. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலிகள் என நாடு முழுவதும் 13 கோடி மக்கள் உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். அவர்களையெல்லாம் கொடூரமான முறையில் மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. ஒருமித்த கருத்துடைய நம்மை போன்ற எதிர்க்கட்சிகள் வழங்கும் எந்த ஆலோசனைக்கும் மத்திய அரசு செவிமடுப்பதில்லை என்று சோனியா காந்தி தெரிவித்தார்.