அதிமுக- அமமுக இணைப்புக்கு முயற்சித்து வரும் பாஜகவின் திட்டத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி மூலம் சசிகலாவுக்கு சோனியா காந்தி தூது அனுப்பிய தகவல் அரசியல் களத்தில் பரபரக்கிறது. 

சோனியா காந்தியோடும், ராகுல் காந்தியோடும் நெருக்கமான  நட்பு கொண்டவர் விஜயசாந்தி. அதேபோல மறைந்த ஜெயலிதாவுடனும், சிறையில் இருக்கும் சசிகலாவுடனும் நெருக்கமாகவும் இருந்தவர். சசிகலா கணவர் நடராஜன் இறந்த போது சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார் விஜயசாந்தி. அந்த சந்திப்பு சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக தொடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி வந்ததாக விஜயசாந்தி தெரிவித்து விட்டுப்போனார். ஆனால், இந்தச் சந்திப்பில் அழுத்தமான அரசியல் உள்ளதாக கூறுகிறார்கள் மன்னார்குடி உறவினர்கள். 

சோனியா ஒரு மெசேஜை சசிகலாவிடம் சொல்லுமாறு விஜயசாந்தியை அனுப்பியதாக கூறுகிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணிக்கு வலுசேர்க்க சசிகலா தரப்பினரின் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்கிறது. பாஜகவின் இந்த முயற்சி வெற்றிபெற கூடாது. சசிகலா அணி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்.

 

அடுத்து அமையும் காங்கிரஸ் ஆட்சி சசிகலா குடும்பத்திற்கு எதிராக பாஜக எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும். நீங்கள் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர்கள். பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக இருங்கள்’’ என சோனியா கூறி அனுப்பிய செய்தியை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் விஜயசாந்தி என்கிறார்கள். டிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திருநாவுக்கரசரும் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகி விடவேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.