some places are escaped from income tax raid

சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 180-க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், சில இடங்களில் மட்டும் சோதனை நடத்தவில்லை.

வருமான வரி சோதனை நடைபெறும் இடங்கள்:

இன்று அதிகாலை முதல், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், மன்னார்குடியில் உள்ள தினகரன் இல்லம், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு, ஜாஸ் சினிமாஸ் என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இயங்கிவரும் சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

பண்ணை வீடுகளில் சோதனை:

தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரின் பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு மற்றும் மன்னார்குடி அருகே உள்ள ரிஷியூர் பகுதியில் உள்ள திவாகரனின் பண்ணை வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள திவாகரனின் நண்பர் தமிழ்ச்செல்வன் வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

இப்படியாக தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்திவரும் வருமான வரித்துறையினர், சில இடங்களில் மட்டும் சோதனை நடத்தவில்லை. அவற்றில் பெரும்பாலானவை சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்புடையவர்களின் வீடுகள் ஆகும்.

சசிகலாவின் குடும்பத்தினரை டார்கெட் செய்து நடத்தப்படும் இந்த வருமான வரி சோதனையில் நடராஜனும் அவரது குடும்பத்தினரும் சிக்கவில்லை. சசிகலாவின் கணவர் நடராஜனின் வீட்டிலோ, அவரது சகோதரரின் வீட்டிலோ வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை. 

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக பிரமுகரான ஆசீர்வாதம் ஆச்சாரி மிகவும் நெருக்கமானவர். இவர், பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர். எனவே இந்த சோதனையிலிருந்து நடராஜனும் அவரது குடும்பத்தினரும் தப்பித்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் நடராஜனை மட்டுமே சாராத சில இடங்களிலும் கூட சோதனை நடைபெறவில்லை.

வருமான வரி சோதனையிலிருந்து தப்பிய இடங்கள்:

சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீடு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் வீடு, சிறுதாவூர் பங்களா மற்றும் பையனூர் பங்களா ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை.

சர்ச்சைக்குரிய சிறுதாவூர் மற்றும் பையனூர் பங்களாக்களிலும் சோதனை நடத்தப்படவில்லை. 

கடந்த 2016 தேர்தலின்போது கண்டெய்னர்களில் பணம் இருப்பதாக வைகோ குற்றம்சாட்டினார். அந்த சமயத்தில் வைகோவின் புகார், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா அந்தப் பங்களாவில் தங்காவிட்டாலும், பாதுகாப்பு கெடுபிடி அதிகமாகவே இருக்கும். ஜெயலலிதா மறைந்த பிறகு அங்கிருந்த பொருட்களை சசிகலா குடும்பத்தினர் அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பங்களாவையும் அப்பகுதியில் உள்ள நிலங்களையும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தாண்டவமூர்த்தி என்பவர் நிர்வகித்துவருகிறார். 

அதேபோல், கங்கை அமரனிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக கூறப்படும் பையனூர் பங்களாவிலும் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை.