ஆளும் தரப்பிலிருந்து சிலர் சசிகலாவை மறைமுகமாக சந்தித்ததாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்த 20ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பரோலில் வெளிவந்த சசிகலா, இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

நடராஜனின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, இடதுசாரி தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். சசிகலாவிடமும் ஆறுதல் கூறினர்.

ஆனால், ஆளும் அதிமுக தரப்பில் நடராஜனின் இறுதி சடங்கில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று ஆகிவிட்டதால் நடராஜனின் மறைவிற்கு செல்லவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

சசிகலா பரோல் முடிந்து சிறைக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது சகோதரர் திவாகரன், ஆளுங்கட்சியினர் சிலர் சசிகலாவை மறைமுகமாக தொடர்புகொண்டு பேசினர். நேரடியாக தொடர்புகொண்டால் பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் மறைமுகமாக தொடர்புகொண்டு பேசினர் என தெரிவித்தார்.

திவாகரன் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுடன் மறைமுகமாக தொடர்புகொண்டவர்கள் யார் என்பதை விசாரித்து வருகின்றனர்.