*    கஜா புயல் நிவாரணத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு கோடியை தனது துறையின் தேவைக்கு வேண்டும்! என்று மெகா கர்சீப் போட்டு வைத்த அமைச்சர் தங்கமணி, ‘இருபத்து எட்டாயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.’ என்றார். ஆனால் சேதத்தை பார்வையிட்ட பின் முதல்வரோ ‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம்!’ என்று சொன்ன கணக்கு,  விக்கலை வர வைத்திருக்கிறது. 

*    தாறுமாறாக சேதமடைந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆறுமுகம், முதல்வர் முன்னிலையிலேயே கலெக்டரிடம் செம்ம வாக்குவாதத்தை நிகழ்த்தியிருக்கிறார். 
*    முதல்வர் வரும் நேரத்துக்கு சற்று முன் திருவாரூர் டூ திருத்துறைப்பூண்டி சாலையில் அமைச்சர் காமராஜ் மற்றும் செல்லூர்ராஜ் இருவரும் ஒரே காரில் சென்றனர். மக்கள் நிறுத்த சொல்லியும் நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் சாலையில் உட்கார, அதிகாரிகள் அமைச்சருக்கு போன் போட்டு ‘சி.எம். வர்ற நேரம், உங்களாலே பிரச்னை வேண்டாம்.’ என்று அலர்ட் செய்ய, அமைச்சர் அலறிக்கொண்டு வந்திருக்கிறார். 

*    அணவயல் பகுதியில் பார்வையிட  படைபட்டாளம் சூட வந்திருக்கிறார் தினகரன். அவரது கார் கான்வாயில், கடைசி காரில் சமைக்கப்பட்ட உணவு செமத்தியாக பேக் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. பேசி முடித்த பின் தங்களுக்கு அந்த உணவை தருவார் தினகரன்! என்று மக்கள் நினைத்தார்களாம். ஆனால் பெப்பே காட்டிவிட்டு நகர்ந்துவிட்டது கான்வாய். 

*    சர்வத்தையும் இழந்து, அவனவன் சப்தநாடியும் அடங்கிக் கிடக்க, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரோ, சப்பாத்தி சுடுவது போல் எடுக்கப்பட்ட போட்டோ, ஓவர் பில்ட் அப்களுடன் அ.தி.மு.க.வினரின் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குரூப்பில் வலம் வர, கடுப்பின் உச்சத்துக்கே சென்று திட்டிக் கொண்டுள்ளனர் விமர்சகர்கள்.