சிலர் வேண்டும் என்றே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் காவல் துறை அதை கவனத்துடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  

தமிழகத்தில் ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது. மாவட்ட ஆட்சியர்கள் கவனமுடன் செயல்பட்டு அனைவரையும் முககவசம் அணிய செய்ய வேண்டும். 

தீபாவளி பண்டிகை வர உள்ளது, ஆங்காங்கே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறார்கள் எனவே போலிசார் தொடர்ந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பருவ மழை துவங்கியுள்ளது. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவாகும் எனவே மாவட்ட நிர்வாகம் கவனமுடன் செயல்பட வேண்டும். 

உள்ளாட்சி அமைப்பின் மூலம், அனைத்து பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் தொற்றை குறைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கை காவல் துறை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். சிலர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் ஏனவே காவல் துறை கவனத்துடன் இருந்து அதை முறியடுக்க வேண்டும் என்றார். விழிப்புடன் செயல்பட்டு தமிழகத்தில் நோய் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.